பறிபோகும் பார்சல்கள்… : கண்டுகொள்ளாத கே.பி.என் பார்சல் சர்வீஸ் நிர்வாகம்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக அனைத்து தொழில்களும் முடங்கி போனதால் சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். பொருளாதாரம் முடங்கிப் போனதால் குடும்பத்தினரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்நிலையில் ஓரளவு இருக்கப்பட்டவர்கள், இல்லாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை ஆங்காங்கே செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடலூரில் இருக்கும் ஒருவர் கோயம்புத்தூரில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை கடலூரில் உள்ள கே.பி.என். பார்சல் சர்வீஸில் ஒரு அட்டைப் பெட்டியில் பதிவு செய்து அனுப்பி இருக்கிறார். அந்த பார்சலும் இரண்டு நாட்களில் கோவைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
கே.பி.என். பார்சல் சர்வீஸ் கோவை அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு அட்டைப் பெட்டி பார்சல் வந்திருக்கிறது. வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்கள். இவரும் அந்த அலுவலகத்திற்கு சென்று பார்சலை கேட்டிருக்கிறார். அந்த அட்டைப் பெட்டியை எடுத்து தருவதற்காக இருபது ரூபாய் பணமும் கேட்டிருக்கிறார்கள். எல்லாம் முடிந்து அட்டைப் பெட்டியை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். அட்டைப் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிப் பொருட்களுக்கு மேல் அந்த அட்டைப் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அந்த அலுவலக நிர்வாகியிடம் கேட்டதற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லையாம். யாரோ இருக்கப்பட்ட நல்ல மனம் படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வது எந்தவகையில் நியாயம் என்று புலம்பியவாறு வீடு திரும்பி இருக்கிறார் அந்த கோவை நண்பர். பார்சல் சர்வீஸில் அனுப்பும் பார்சல்களை பிரித்துப் பார்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
இதுபோன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க கே.பி.என். பார்சல் சர்வீஸ் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட நபரின் கோரிக்கையாக இருக்கிறது.
- அருண்