திருமணமான பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை…
பெண்களின் எண்களாக பார்த்து மிஸ்டுகால் கொடுத்து அவர்களுடன் பேசுவதை ரெக்கார்டு செய்து வைத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 பெண்களிடம் 560 முறை ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் சிக்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு 3 நாட்கள் தொடர்ச்சியாக குறிப்பிட்ட எண்ணில் இருந்து மிஸ்டுகால்கள் வந்துள்ளன. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரித்தால் எதிர்முனையில் பேசிய ஆண் குரல் ஆபாசமாகப் பேசி வம்பு செய்துள்ளான்.
இதையடுத்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவிக்க, அவரது கணவர் பேசிய போதும் இதேபோல ஆபாசமாகப் பேசியுள்ளான் அந்த நபர்..!
இதையடுத்து தனது நண்பர் மூலம் அந்த செல்போன் நம்பரின் முகவரியை கண்டுபிடித்துள்ளார். மலை கிராமமான நூலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி மற்றும் நரசிம்மன் என இரு இளைஞர்கள் சேர்ந்து இந்த மிஸ்டுகால் வம்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ரவியின் வீடுதேடிச்சென்று சிறப்பாகக் கவனித்ததுடன், இனி யாருக்கும் இதுபோல செல்போனில் மிஸ்டுகால் சேட்டையில் ஈடுபடக்கூடாது என்று அவனது செல்போனைப் பறித்து வந்ததாக கூறப்படுகின்றது.
ரவியின் செல்போனில் இருந்த குரல் பதிவுகளைப் பார்த்த அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாக பேசிய ரவி, நரசிம்மன் இருவரும் 560 ஆபாசக் குரல் பதிவுகளை வைத்து பெண்களை மிரட்டி பிளாக்மெயில் செய்து தங்கள் ஆசைக்கு இணங்க வைத்தது தெரியவந்தது.
நாகர்கோவில் காசி விவகாரம் போல இருந்ததால் உடனடியாக அந்த செல்போனை உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அந்த பெண், அவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ரவியை கைது செய்த காவல்துறையினர், அவன் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளி நரசிம்மனை சுற்றிவளைத்து அவனது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான மலைக்கிராமத்தில் இருந்து கொண்டு, வாட்ஸ் அப்பில் புகைப்படம் வைத்துள்ள பெண்களைக் கண்டறிந்து அவர்களது செல்போனுக்கு மிஸ்டுகால் கொடுப்பதை வாடிக்கையாக்கி இந்த சேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது
மிஸ்டு காலை பார்த்து அவர்களுக்கு செல்போனில் திரும்ப அழைக்கும் பெண்களிடம் விவரம் தெரியாதவர்களை போல பேசி மயக்குவதை வாடிக்கையாக்கி வைத்துள்ளனர். இவர்களின் பேச்சில் மயங்கிய பள்ளி மாணவிகள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களின் வலையில் சிக்கிய ஒவ்வொரு பெண்ணிடமும் இவர்கள் இருவரும் மிரட்டும் முறையே உச்சக்கட்ட ஆபாசமாக இருக்கும் என்றும், வெளி மாநிலப் பெண்களையும் விட்டு வைக்காமல் அவர்களிடம் தமிழில் ஆபாசமாக பேசி இருக்கும் ஆடியோக்களும் சிக்கி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு புகார் தொடர்பாக, காவல் துறை அதிகாரி ஒருவர் செல்பொன் மூலம் இவர்களிடம் விசாரித்த போது தான் வேலூரை சேர்ந்த விஜய் எனவும், தோழி சிம்ரன் என நினைத்து தவறாக போன் செய்தேன் என்றும் அப்பாவியை போல கெஞ்சி நடித்து தப்பியுள்ளான் ரவி, இதனை காவல் அதிகாரியும் நம்பி இது போன்று செயல்களில் ஈடுபடக்கூடது என எச்சரிக்கை செய்துள்ளார்.
ஆனாலும் அடங்காத இருவரும் ஆபாச பேச்சுக்கு யாரும் கிடைக்கவில்லை என்று செல்போன் கஸ்டமர்கேர்-க்கு போன் செய்து தங்களால் முடிந்தவரை ஆபாசமாக பேசி தங்களுடைய ஆசையை தீர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
ரவியும் நரசிம்மனும் சேர்ந்து கைவைக்கும் இடம் எல்லாம் திருமணமான பெண்களாக இருப்பதால், பலர் வீட்டிற்கு பயந்து வெளியே சொல்லாமல் அப்படியே மறைத்துள்ளனர்.
பெண்கள் கூடுமானவரை அறிமுகம் இல்லா நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுக்காமல் தவிர்ப்பது நலம் என்றும், இல்லையேல், மிஸ்டுகாலுக்கு தேடிச்சென்று பதில் அளித்து வம்பு வழக்குகளில் சிக்க நேரிடும் என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், இது போன்று பிளாக்மெயில் ஆசாமிகளிடம் சிக்கிய பெண்கள் துணிச்சலுடன் புகார் அளித்தால் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
– வேல்மணி