தமிழகம்

ஓசூர் தொழிலதிபர் கடத்தலின் பின்னணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சத்தியமூர்த்தி. இவரது மாமனார் வீடு சேலம் மாவட்டம் தாதகாபட்டியில் உள்ளதால் அவ்வப்போது அங்கு சென்று வரும் வழக்கம் உண்டு. அப்போது சத்தியமூர்த்திக்கு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவன் நண்பனான். ஓசூர் சென்ற கார்த்தியிடம் அங்கு நிலம் ஒன்றை காட்டி வாங்கிக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார் சத்தியமூர்த்தி. கார்த்தியும் அதனை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துவிட்டு சேலம் வந்திருக்கிறான்.

கடந்த 11ஆம் தேதி சத்தியமூர்த்தியை செல்போனில் அழைத்த கார்த்தி, அந்த நிலத்தை வாங்கிக் கொள்வதாகவும் முன்பணமாக 2 லட்சம் தருவதாகவும் அது தொடர்பாக பேச சேலம் வருமாறு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. காரில் சேலம் சென்ற சத்தியமூர்த்தியும் கார்த்தியும் நெய்க்காரப்பட்டியிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தியுள்ளனர். உணவகத்திலிருந்து வெளியே வரும்போது, திடீரென அங்கு வேறு ஒரு காரில் வந்த கார்த்தியின் கூட்டாளிகள் சத்தியமூர்த்தியை கடத்திச் சென்று சேலம் குகைப் பகுதியிலுள்ள கார் ஷெட் ஒன்றில் அடைத்து வைத்து ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பணம் கொடுக்க மறுத்ததால் தொடர்ந்து 3 நாட்களுக்கு அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியவர்கள், 12 லட்ச ரூபாயை பறித்துக்கொண்டு 14ஆம் தேதி விடுவித்துள்ளனர். போலீசிடம் தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம் என்று கூறி எச்சரிக்கை செய்தும் அனுப்பியுள்ளனர். ஓசூர் வந்து சேர்ந்த சத்தியமூர்த்தியை போலீசில் புகாரளிக்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தவே, சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், முதலில் கோபால், கௌரிசங்கர், சுஜித், ஜீவா அகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளிகளான பாபு, முருகபாண்டியன், பிரகாஷ் ஆகியோரை ஆகியோரையும் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கார்த்திக் மீது ஆன்லைன் மோசடி, மதுரையில் செக் மோசடி, நில மோசடி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்துள்ளது.

சத்தியமூர்த்தியுடன் ஓசூர் சென்ற கார்த்தி, அவரது பொருளாதாரப் பின்னணி, சொத்துகள், குடும்பம் உள்ளிட்டவற்றை துல்லியமாக நோட்டம் விட்ட பிறகே இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளான். காதலை மட்டுமல்ல, நட்பை தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button