அமைச்சர் தந்தையின் கடன் பிரச்சினை ! முதலமைச்சரிடம் பஞ்சாயத்து !.?
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து, இளம்வயது அமைச்சராக அமைச்சரவையில் இடம் பிடித்தார். கடந்த தேர்தலில் சரோஜா சமூக நலத்துறை அமைச்சர், பணபலம் மற்றும் அதிகாரத்துடன் தேர்தலை அனுகியதால், அவரை சமாளிக்க முடியாமல் தேர்தல் செலவுகளுக்காக சிலரிடம் மதிவேந்தனின் தந்தை மாயவன் கடன் வாங்கி செலவு செய்து மகனை வெற்றிபெறச் செய்துள்ளார்.
மதிவேந்தனின் தந்தை மாயவன் ஏற்கனவே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் மதிவேந்தன் வெற்றிபெற்று அமைச்சராகி தந்தையின் கனவையும் நிறைவேற்றி விட்ட நிலையில், தேர்தல் செலவுகளுக்காக வாங்கிய ஐந்து கோடி கடனை இன்னும் திருப்பிக் கொடுக்காமல் இருந்து வருகிறாராம். கடன் கொடுத்தவர்கள் அமைச்சரின் தந்தையிடம் கேட்பதற்கு பயந்து, அப்பகுதியின் முக்கியஸ்தர்கள் மூலம் பஞ்சாயத்து செய்து வருகிறார்களாம்.
தேர்தல் செலவுகளுக்காக வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வரும் அமைச்சரின் தந்தை மாயவன் விஷயம் நாமக்கல் மாவட்டம் முழுவதும் திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் கவனத்திற்கு வந்துள்ளதாம். முதல்வரே நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.
மாயவன் அமைச்சரின் அதிகார பலத்தால் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வருகிறாரா ? அல்லது உண்மையிலேயே பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாரா என்பது முதல்வரின் விசாரணையில் தெரியவரும். எது எப்படியோ பணம் கொடுத்தவர்களுக்கு பணம் கிடைத்தால் சரி என்கிறார்கள் நாமக்கல் திமுகவினர்.