அம்மாவுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் : மருத்துவரின் மகள் வேண்டுகோள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாலும், பலர் பொறுப்பற்ற முறையில் சாலைகளில் சுற்றி வருகின்றனர். அப்படி உள்ளவர்களுக்கு பல வகைகளில் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவர் ஒருவரது மகளின் உருக்கமான வேண்டுகோள் பதாகைப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த அம்ருதா. 9 வயதான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நல்லதம்பி வேட்டைக்காரன்புதூர் மருத்துவமனையிலும், தாய் பூரணி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அம்ருதா ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அம்ருதா கையில் வைத்திருக்கும் பதாகையில், ‘என் அம்மா ஒரு மருத்துவர். உங்களுக்கு உதவுவதற்காக என்னை விட்டு பிரிந்து உள்ளார். நீங்கள் தயவுசெய்து வீடுகளிலேயே இருந்து உதவ முடியுமா? நான் என் அம்மாவின் வருகைக்காக காத்திருக்கிறேன். வீடுகளில் இருங்கள், நாட்டை காப்போம்‘ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
மருத்துவரின் சேவைகளையும், மகளின் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.