ரேஷன் அரிசி கடத்தலில், கோவையை கலக்கும் கும்கி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கடத்திவரும் சம்பவங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகளை தினசரி 50 டன்களுக்கு மேல் சில கும்பல் கடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நமது குழுவினர் விசாரணை மேற்கொண்டபோது.. கோவையில் உள்ள நகர்புறங்களில் வடவள்ளி, வி.என் புதூர், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், வீரபாண்டி பிரிவு, துடியலூர் பகுதிகளில் உள்ள 99 ரேஷன் கடைகளிலிருந்து, தலா 500 கிலோ வீதம் தினசரி வெளிமாநில தொழிலாளர்களை வைத்து, இருசக்கர வாகனங்களில் அரிசி மூட்டைகளை கும்கி என்பவர் சேகரித்து வருகிறார்.
இவர் கவுண்டம் பாளையத்தில் மிக்சர் குடோன் என்கிற பெயரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் அரிசியை பாலிஷ் செய்யும் இயந்திரங்களை பொருத்தி, ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து வெளிமாநிலங்களுக்கு கடத்தி வரும் தொழிலை நீண்ட நாட்களாக செய்து வருகிறார். இவரிடம் ஐந்து பெண்கள், ஐந்து ஆண்கள் என பத்துப்பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் ஐந்து ஹோண்டா ஆக்டிவா, ஜந்து டிவிஎஸ் 50 வாகனங்களில் ஒவ்வொரு கடைகளிலிருந்தும் தலா 500 கிலோ வீதம், தினசரி இவரது குடோனுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர். வரும் வழியில் காவல்துறையினர் யாராவது வழிமறைத்து கேட்டால், நாங்கள் வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி வந்திருக்கிறோம். எங்களது அன்றாட உணவு தேவைக்காக ரேஷன் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து அரிசியை வாங்கி வருகிறோம் எனக் கூறி, அவர்களுக்கு ரூபாய் நூறு, இருநூறு என கையில் இருப்பதை கொடுத்துவிட்டு வந்து விடுகின்றனர்.
இவர்கள் மூலம் தனது குடோனுக்கு வந்து சேர்ந்த ரேஷன் அரிசிகளை பாலிஷ் செய்து, ரேஷன் அரிசி கடத்தலில் கோலோச்சும் ஒரு பாய் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வருகிறார். அந்த பாய் பண பலத்தால் அதிகாரிகளை வளைத்து நீண்ட காலமாக இந்த தொழிலை செய்து வருவதாக ஆதாரபூர்வமான தகவல்கள் வந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி கோவையிலிருந்து ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுக்கு தலைவனாக கும்கி என்பவர் தான் இருந்து வருகிறார் என்கிறார்கள். இவர் சில மாதங்களுக்கு முன்பு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்த ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டு சில இடங்களில் சோதனை செய்து கைது செய்த படலங்களும் நடைபெற்றது. இருந்தாலும் கோவை நகரில் கும்கி என்பவர் தினசரி ரேஷன் அரிசியை கடத்தி வருவது அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கிறது. தெரிந்துதான் என்னை யார் என்ன செய்ய முடியும் என்ற மமதையில் இந்த கும்பல் ரேஷன் அரிசிகளை கடத்தி வருகிறது.
ஏழை, எளியோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வாழ்வாதாரத்திற்காக இலவசமாக அரசு வழங்கும் ரேஷன் அரிசிகளை, கடை விற்பனையாளர்களிடம் கணிசமான தொகையை கொடுத்து பெற்றுக் கொண்டு, வெளிமாநிலங்களுக்கு கடத்தி கொள்ளை லாபம் பெற்று வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், கண்டும் காணாமல் இருப்பது ஏனோ ?.! என புலம்புகிறார்கள் அப்பகுதியினர்.