தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வருகிறார் என்று சுமார் 20 ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதற்காக அவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எப்படியும் ரஜினிகாந்தை தமிழக முதலமைச்சராக பார்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும், தற்போது ஓய்வு பெறும் வயதாகி விட்டது. இதேபோல் ரஜினிக்கும் ஓய்வு பெறும் வயது வந்துவிட்டது. இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் தனது அரசியல் வருகையை உறுதிபடுத்தினார். அப்போது பேசிய அவர், புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். இருப்பினும் ”ரஜினி மக்கள் மன்றம்” என்ற பெயரில் கட்சிக்கான கட்டமைப்பை உறுதிப்படுத்தி வருவதாக அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு பின், காலா, 2.0, பேட்ட ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’தர்பார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே ரஜினியின் அரசியல் வருகை எப்போது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதேசமயம் அவரது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது.
இந்த சூழலில் பாஜகவின் பார்வை ரஜினி மீது விழுந்துள்ளது. தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக இருக்கிறது.
அந்த இடத்தில் ரஜினியை அமரவைக்க தேசிய தலைமை முயற்சித்து வருகிறது. இதற்காக அமித் ஷா பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறார். ஆனால் ரஜினி பிடி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு வலுவான அடித்தளம் இல்லை.
மக்கள் மத்தியில் போதிய செல்வாக்கும் கிடையாது. எனவே ரஜினி போன்ற பெரிய ஆளுமைகளைக் கொண்டு தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஜினிக்கு கடிவாளம் போடும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறினார்.
தமிழ்நாட்டை கஜா புயல் கடந்த ஆண்டு தாக்கியது. இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கின. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இப்போதும், அந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிப்புகளிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காகத் தனியாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர், புயல் தாக்கியபோது நிவாரணப் பொருட்கள் வழங்கினர். சிலர் வீடுகள் கட்டி தரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர்.
அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு தலா ஒரு லட்சத்தில், நடிகர் ரஜினி வீடு கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார். 6 மாதக் காலமாக நடந்து வந்த கட்டடப் பணிகள் சில நாட்களுக்குமுன் முடிவடைந்தது. இதற்கிடையே இமயமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ரஜினி சமீபத்தில் சென்னை திரும்பினார்.
ரஜினி சென்னை வந்தடைந்தவுடன் வீடுகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடு கட்டி தருவதாக உறுதியளிக்கப்பட்ட 10 பேரைச் சென்னைக்கு வர ரஜினியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 குடும்பத்தாரும் வந்தடைந்தனர்.
போயஸ் கார்டனில் வைத்து காலை 10 மணியளவில் ரஜினி தலா ஒரு லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் சாவியைச் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.
இடைத்தேர்தல் பரபரப்புகள் நடந்து வந்த நேரத்தில், ரஜினி வீடு வழங்கி அதைப் பத்திரிகைகளுக்குத் தெரியப்படுத்தியது, பல விவாதங்களைக் கிளப்பியது. அரசியலில் விரைவில் களம் இறங்குவார் எனக் கருதப்படும் ரஜினி, இடைத்தேர்தல் நடந்த தேதியில் தலா ஒரு லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் குறித்த விளம்பரம் எதற்கு என்ற கேள்வி நெட்டிசன்களால், எழுப்பப்படுகிறது.
- சூரியன்