தமிழகம்

தமிழ்நாடு இன்றைய எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக அமைந்த நாள் : நவம்பர் 01

இன்றைய தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் 1956 இல் உதயமானது. நவம்பர் 1, கேரளா மக்கள் ‘நவகேரளம்’ என்று கொண்டாடுகிறார்கள்.


கர்நாடகம் ‘அகண்ட கர்நாடகம்’ ஆக ராஜ்ய உற்சவமாக விழா கொண்டாடியது. அந்த மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விழா எடுக்கப்பட்டுள்ளன. நடிகை காஞ்சனா போன்ற திரையுலக ஆளுமைகளும், இலக்கிய ஆளுமைகளும் கௌரவிக்கப்பட்டனர்.

விசால ஆந்திரம் என்று ஆந்திரம் கொண்டாடி உள்ளது. மகாராஷ்டிரம் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்று கொண்டாடியுள்ளது, குஜராத்தும் ‘மகா குஜராத்’ என்று கொண்டாடியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கொண்டாட்டங்கள் இல்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளை 2006 ம் தமிழ்நாடு -50 ஆண்டிலிருந்து ஒரு விழாவாக எடுத்தேன். அதன் அழைப்பிதழ் கூட இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


நம் முன்னேற்ற பாதையில் தான் செல்கின்றோமா? மாலைகளை போடுகிறோம் பலருக்கு. மண்ணிருந்தால் தானே மாலைகள் போட முடியும். மண்ணை கொண்டாடுவது தான் முக்கியம். அடிப்படையும் கூட.

இப்படி வரலாற்று ரீதியான நிகழ்வுகளை கொண்டாடலாம், சில பகுதிகளை நாம் இழந்ததால் விழிப்புணர்வு நாளாகவும் ஏற்பாடு செய்யலாம். எதையும் சிந்திக்காமல், இந்த நிகழ்வை கவனிக்காமல் இருக்கிறோமே; எப்படி தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்லும். எதிலும் போலி பாசாங்கு, பிம்ப அரசியலை நம்பினால் ஒன்றும் செய்ய முடியாது. காவிரியில் தண்ணீர் வராது, முல்லை பெரியாறில் தண்ணீர் வராது, நீராதாரங்கள் பாதிக்கப்படும், மீனவர் சுடப்படுவான், விவசாயிகளுக்கு புனர்ஜென்மம் கிடைப்பது சிரமம். நம்முடைய உரிமைகளையே நினைத்து பார்க்க நேரமில்லாத நமக்கு நாம் எப்படி நம்முடைய பிரச்சினைகள் தீரும். தமிழகம் என்ற மண் உதயமானது கூட நினைவில் இல்லாமல் வேறு விசயத்தை பேசிக்கொண்டு காலத்தை போக்கி கொண்டிருக்கிறோமே.

தமிழ்நாடு இன்றைய எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக அமைந்த நாள் நவம்பர் 1. இந்த நாளை கடந்த காலங்களில் யாரும் கண்டு கொண்டதில்லை.

கடந்த 2006ம் ஆண்டில் நவம்பர் 1இல் சென்னையில் நான் 50வது ஆண்டு குறித்தான விழாவை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடத்தினேன். அதில் நெடுமாறன், வைகோ, இரா. செழியன் போன்றோர் பங்கேற்றனர். அதன்பின் தான் இது பலரது கவனத்தைப் பெற்றது என்றசெய்தியைக்கேட்டுமகிழ்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாது நம் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றதேஎன்றதிருப்தியும் அடைந்தேன்.அதன் அழைப்பிதழ் இங்கே உள்ளது.
இந்த நிகழ்வின் 25வது ஆண்டு நினைவு விழாவை தமிழக அரசு, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது சென்னையிலும் நாகர்கோவிலிலும் நடத்தியது. இதில் நாகர்கோவிலில் நடந்த விழாவில் நெடுமாறனும், சென்னை கலைவாணர் அரங்கில் எம்ஜிஆர் கலந்துக் கொண்ட விழாவில் நானும், தி.சு. கிள்ளிவளவனும் கலந்துக் கொண்டோம்.

மொழிவாரி மாநிலம் அமைந்து 63ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, மாற்றுக் கட்சி தலைவர் ஒருவரும், நாடாளுமன்றத்தில் பத்தாண்டுகள் மேலவை உறுப்பினராக உள்ள ஒருவரும் இதுகுறித்து என்னிடம் கருத்து தெரிவிக்கையில் “சங்கரலிங்கனார்” அவர்கள் இதற்காக பெரிதும் பாடுபட்டார், உயிரிழந்தார் என குறிப்பிட்டு நீங்கள் பதிவு செய்ய வில்லையே என் பதிவை பார்த்து கேட்டனர். எனக்கோ என்ன இப்படி புரிதல் இல்லா மனிதர்களாக?என பட்டது.


மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்டது நவம்பர் 1, 1956 ஆகும். நமது தமிழத்தின் சில பகுதிகளை பிரித்து அண்டை மாநிலங்களில் இழந்தோம்.


ஆனால் சென்னை மாகாணம்(மெட்ராஸ்) என்பது தமிழ் நாடு என்று 1967ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக தான் தியாகி சங்கரலிங்கனார் 77 நாட்கள் விருதுநகரில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகம் முன்னெடுத்து நடந்த போராட்டங்கள். இரண்டையும் இணைத்து ஓரே கால்கட்டம் என பார்ப்பது முரணானது.

நான் எனது கருத்தினை, ’இழந்தது அதிகம்’ என்ற தலைப்பில் குமரி மாவட்ட இணைப்பு போரட்டத்தில் புதுக்கடையில் 16 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள் அதில் 9பேர் பலியானர்கள். சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசி கொல்லப்பட்டார். அதிகபட்சமாக 36 பேர் கொல்லப்பட்டனர் என்றும் சொல்லப்பட்டது.

இதனை ஏன் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் என்றால் அரசியல் மட்டுமின்றி வரலாற்றில் தியாகங்கள் மதிப்பிழந்து போகின்றன. மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டியவர்கள் தவறாக பேசுகின்ற வேளையில், வரலாறுகள் மறுக்கபடும் பட்சத்தில் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும்?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button