இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் 11 பேர் உயிரை பறித்துள்ள நிலையில் அது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும்“ என்று அதிமுக அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி குடும்பத்தை நட்டாற்றில் தவிக்க விட்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து அதிமுக அரசு கவலைப்படவும் இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவும் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
சூதாட்டம் கொடுமையானது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடுப்பது குறித்து அரசு சட்டமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை மாதமே உத்தரவிட்டும், மூன்று மாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பிறகாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சிறிய தொகையை முதலில் பரிசாக கொடுத்து ஆசை காட்டி பிறகு பெரிய தொகைக்கு நஷ்டத்தை இழப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை இருட்டில் தள்ளும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்?. என்ன உள்நோக்கம்?
எந்திரங்களை வைத்து இளைஞர்களின் உயிரை பறிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும் எனவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் பொது மக்களின் நலன் கருதி பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யவும், இதை நடத்துவர்களை கைது செய்யவும் தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரானா தடுப்பு பணிகள் மற்றும் நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது எனவும் கோவையில் மேற்கொள்ளபட்டு வரும் பணிகள் குறித்தும் பட்டியலிட்டார்.
மேலும் ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளதாகவும், அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார். மதுரை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெறுகின்றது. இதில் தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்களின் கருத்துகள் அடிப்படையில் இதை தடை செய்வது குறித்து பரீசிலித்து வருகின்றோம் என தெரிவித்தார்.
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதுடன், அவர்கள் உயிரை போக்கி கொள்ளும் நிலைக்கு ஆன்லைன் ரம்மியால் தள்ளபடுகின்றனர். இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார். பொது மக்களின் நலன் கருதி அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யவும், இதை நடத்துவர்களை குற்றவாளிகளாக அறிவித்து கைது செய்யவும் இந்த அரசு உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் புதுக்கட்சி துவங்குவது குறித்து பேசிய முதல்வர், அது அவரது உரிமை என்று தெரிவித்தார்.
7 பேர் விடுதலை கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது, அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு அக்கறையுடன் செயல்படுகின்றது. தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு சட்டரீதியாக அனுமதிக்க முடியாது. ஊர்வலம் நடத்த கூடாது என மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. அந்த சட்டத்தின் படி அனுமதி வழங்க முடியாது எனவும் முதல்வர் தெரிவித்தார்.
திமுக ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஓட்டப்படுவது குறித்த கேள்விக்கு, யாரோ ஒட்டும் போஸ்டருக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று நிர்வாகங்கள், பெற்றோர் மத்தியில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. கொரோனா குறைவதால் திறக்கலாம் என அரசு முடிவு செய்தது. ஆனால் ஊடகம், பத்திரிகை வாயிலாக சில பேர் பள்ளிகள் திறக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர் என்பதால், இதையும் அரசு கவனத்தில் எடுத்து கொண்டு பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை நடத்த இருக்கின்றது எனவும், அதில் எடுக்கும் முடிவு செயல்படுத்தபடும் எனவும் தெரிவித்தார்.
– சாகுல்ஹமீது