மின்வாரிய தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின் ஊழியர் மத்திய அமைப்பு, பொறியாளர் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன், மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மின் உற்பத்தியைத் தனியாரிடம் கொடுக்கும் முடிவைக் கண்டிப்பது இந்தப் போராட்டத்தின் முதன்மையான நோக்கம். அத்துடன், 10 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சாலைக் கண்டித்தும், கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினால் ஊனமுற்றோர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அரசாணை 304 ஐ மின்வாரியத்தில் அமுல்படுத்த மறுத்து வருவதை கண்டித்தும், மின் ஊழியர்கள் பொறியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மின்துறை அமைச்சர் மற்றும் வாரிய தலைவரிடம் பலமுறை நேரில் பேசியும் தீர்வு காணப்படாததைக் கண்டிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு ஊழியர்களின் தொழிற்பாதுகாப்புக்காக தொழிற்சங்கள் ஒன்றுபட்டு பல்வேறு கோரிக்கைகளான பணியிட மாறுதல் பெற்று அனைத்து பணியாளர்களையும் பணி விடுப்பு செய்ய வேண்டும். தற்காலிகமாக பணியிட மாறுதல்களை கைவிட வேண்டும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் கொடுக்கும் கடிதங்களுக்கு பதில் வழங்க வேண்டும் துணை மின் நிலையங்களில் இயக்குனர் பணிக்கு களப்பணியாளர்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் முறை பணியில் உள்ள ஆபரேட்டர்களுக்கு கட்டாயம் உதவியாளர்கள் நியமிக்க வேண்டும் வசூல் பணி நேரம் முடிந்தும் வசூல் பணி செய்திட நிர்பந்தத்தை கைவிட வேண்டும், தனிநபர் மின் தடை மாலை 6 மணிக்கு மேல் பணி செய்திட மிரட்டுதல் மற்றும் கட்டாயப்படுத்தவதை தவிர்க்க வேண்டும் அனைத்து விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் உத்தரவாதம் வழங்க வேண்டும் உட்பட 18 தீர்மானங்கள் கடந்த 30.-9-.2020 மற்றும் 6.10.2020 ஆகிய தேதிகளில் உடுமலை மின்பகிர்மான வட்ட தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதின் அடிப்படையில் மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற கோரி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- முத்துப்பாண்டி