அரசியல்

திருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி…

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் நடிகர் கருணாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியது. சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற கருணாஸ், அதிமுக நிர்வாகிகளின் எதிர்ப்பு காரணமாக திருவாடானை தொகுதிக்கு செல்லாமல் இருந்தார். பின்பு காவல்துறை பாதுகாப்புடன் தொகுதிக்கு சென்று வந்தார். அதிமுகவினரின் ஒத்துழைப்பு இல்லதால் தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை தன்னால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என நடிகர் கருணாஸ் பல நேரங்களில் குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அரசுக்கு எதிரான மனநிலையில் திருவாடானை சட்டமன்றத் தொகுதி மக்கள் உள்ளதால், இந்த தேர்தலில் திமுகவில் போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

திருவாடானை சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை தேவர், யாதவர், முஸ்லீம், தேவந்திரகுல வேளார், உடையார் என பல சமூக மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி. இந்த தொகுதியில் திமுகவில் போட்டியிட பலரும் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திருவாடானை தொகுதியில் போட்டியிட மேலிடத்திடம் காய்நகர்த்தி வருகிறார்.

யாதவ சமூகத்தை சேர்ந்த ராஜகண்ணப்பன், யாதவ சமூக வாக்குகள் கணிசமாக உள்ள தொகுதி என்பதாலும், திமுக தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால் திருவாடனை தொகுதியை குறிவைத்து காய்நகர்த்தி வருகிறார்.

அடுத்ததாக இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திருவாடானை தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார். தன்னுடைய சொந்த தொகுதியான முதுகுளத்தூர் தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், திருவாடானை தொகுதி தனக்கு பாதுகாப்பான தொகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் முத்துராமலிங்கம் இந்த தொகுதிக்கான வேலையை தொடங்கி உள்ளார்.

முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுப.த.திவாகரன் மீண்டும் திருவாடனை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளார். மேலும் ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் நல்ல சேதுபதி, திருவாடனை (தெற்கு) ஒன்றிய செயலாளர் சரவணன், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த திருவாடனை ஒன்றிய சேர்மன் முகமது முக்தார் என பலரும் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளனர்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் வசிக்கும், திமுக செயற்குழு உறுப்பினராக உள்ள தனசேகரன், இரண்டு முறை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கபடவில்லை என்றால், தனது சொந்த மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் போட்டியிட திமுக மேலிடத்திடம் வாய்ப்பு கேட்டு முயற்சித்து வருகிறார்.

திமுக கூட்டணி கட்சியினரும் திருவாடனை சட்டமன்றத் தொகுதியை பெற கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி, திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக 5 முறை இருந்துள்ளார். அதற்கு முன்னதாக அவருடைய தந்தை கரியமாணிக்க அம்பலம் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.

கடந்த தேர்தலில் கே.ஆர்.ராமசாமி காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய பழைய தொகுதியான திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தான் அல்லது தன்னுடைய மகனை நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் திருவாடனை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. இந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக உள்ள தொழில் அதிபர் லாட்டரி மார்ட்டின் மனைவி லீமாரோஸ் அல்லது அவருடைய உறவினர்கள் இந்த தொகுதியில் ஐ.ஜே.கே சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முயற்சித்து வருகின்றனர்.

உடையார் சமூக வாக்குகள் மற்றும் செலவு செய்ய பணபலம் உள்ளதால், திமுக கட்சி செல்வாக்கு உடன் வெற்றி பெறலாம் என்று கணக்கு போட்டு தொகுதியை எதிர்பார்கின்றனர் ஐ.ஜே.கேவினர். திருவாடானை தொகுதியில் கணிசமான சிறுபான்மை வாக்குகள் உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சியும், திமுக தலைமையுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது, தங்களுக்கு சாதகமான தொகுதியான திருவாடனை தொகுதியை கேட்டு பெறும் எண்ணத்தில் உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், இராமநாதபுரம் மாவட்ட கோட்டாவில் அமைச்சர் ஆகலாம் என்பதால் ராஜகண்ணப்பன், காதர்பாட்சா முத்துராமலிங்கம், திவாகரன் இடையே தொகுதியை பெறுவதில் கடுமையான போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button