அரசியல்

நீட்டையும், மோடியையும், துரத்த வேண்டும் : வேல்முருகன்

தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளவே நீட் நடத்தப்படுகிறது என்பது தெரிந்தும் தமிழக அரசு அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

வேல்முருகனின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திட்டமிட்ட முறைகேடுகள், தில்லுமுல்லுகள், ஏன் மோசடிகள்தான் நீட் தேர்வு. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது, இடஒதுக்கீடு- சமூக நீதி என்று இருக்கக் கூடாது என்கிற வக்கிர நோக்கிலான நீட்டை ஒழிக்க, மக்கள் படை திரண்டெழ வேண்டும்; அதற்குத் துணை நிற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றே உறுதியளிக்கிறோம்.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 13ந் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது; இதனால் அவர்களுக்கென கடந்த 14ந் தேதி தேர்வு நடைபெற்றது. இரண்டு கட்டமாக நடந்த மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.

நீட் தேர்வு 2020ல் வெற்றி பெற, பொதுப் பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்ணும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் கீழ் உள்ள மாணவர்கள் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும்.

மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில், அகில இந்திய தரவரிசைப் பட்டியலை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிடும். தேர்வு முடிவுகளை வெளியிடும் இந்தத் தேசியத் தேர்வுகள் முகமை தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பையும் அறிவிக்காத நிலையிலேயே மருத்துவப் படிப்புக்கான 2020இன் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இது ஏன் என்ற கேள்வி மிகப் பெரியதாக உருவெடுத்துள்ளது.

ஏற்கனவே 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடந்துவரும் இந்த நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் நடந்த முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும் குளறுபடிகளும் பட்டியலிடப்பட்டன.

அதை நாடே அறியும். இந்த 2020 தேர்விலும் நடந்த மோசடிகள் கட்டாயம் வெளிவந்தே தீரும். அதற்கு அடையாளமாக, திரிபுரா மாநிலத்தில் 3,635 பேர் நீட் தேர்வு எழுதியதில், 88,839 பேர் தேர்வானதாக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதை எண்ணிக்கைத் தவறுதான் என்று நியாயப்படுத்திவிட முடியாது. செய்யப்பட்ட மாபெரும் தவறை மிகச் சாதுர்யமாக, சாமர்த்தியமாக மூடிமறைக்க முயன்றதில் சிதறிய அல்லது விடுபட்ட துளி அளவு தவறு என்றுதான் பார்க்க முடியும்.

திருடன் அல்லது கொலையாளி அதைச் செய்துவிட்டுச் செல்கையில் ஏதேனும் ஒரு சிறு தடயத்தையாகிலும் ஆதாரமாக விட்டுச் செல்வான். அந்த பாணியில்தான் நீட் தேர்வுப் பட்டியலில் நிகழ்ந்த இந்தச் சிறு எண்ணிக்கை தவறும். ஆகவே மூடி மறைக்கப்பட்ட முழு மோசடியும் விரைவில் வெளிவந்தே தீரும்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வியை மேம்படுத்த ரூ.5718 கோடி மதிப்பிலான உலக வங்கித் திட்டத்திற்கும் ஒப்புதலளித்திருக்கிறது மோடியின் ஒன்றிய அமைச்சரவை. இது பள்ளிக் கல்வியைச் சீரழிக்கவும் கார்ப்பொரேட்மயமாக்கிக் குட்டிச் சுவராக்கவுமான ஏற்பாடேயாகும். பள்ளிக் கல்விதான் அடிப்படைக் கல்வியாகும். கல்விக்கான அந்த அடித்தளத்தையே தகர்ப்பதுடன், நீட்டை எந்த நிலையிலும் தவிர்க்காதிருப்பதற்கே, மோடியின் உலக வங்கியுடனான பள்ளிக் கல்வி மேம்பாட்டு ஒப்பந்தமாகும். இப்படித் தவறுகள் என்று இல்லை; திட்டமிட்டே செய்யும் முறைகேடுகள், தில்லுமுல்லுகள், ஏன் மோசடிகள்தான் நீட் தேர்வு என்பது இந்திய மக்களுக்கே நன்கு தெரிகிறது, புரிகிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக எடப்பாடியார் அரசுக்கும் இது புரியும்.

ஆனால் இந்த அரசு நீடிக்கக் காரணமான மோடியின் சொல்லைத் தட்டாமலே நீட்டை விலக்காதிருக்கிறார் எடப்பாடியார். திட்டமிட்ட இந்த மோசடி வேலை தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளவே நடத்தப்படுகிறது என்பது தெரிந்தும் தன் எதிர்வினையை ஆற்றாதிருக்கிறார் எடப்பாடியார். அதற்காக இத்தகைய நீட்டையும் சரி, இத்தகைய தமிழக முதல்வரையும் சரி, ஏன் நீட்டைக் கொண்டுவந்த மோடியையும் சரி; தமிழக மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. பேயோட்டுவது போல்தான் துரத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது, இடஒதுக்கீடு- சமூக நீதி என்று இருக்கக் கூடாது என்கிற கொடிய வக்கிர நோக்கில் கொண்டுவரப்பட்ட நீட்டை ஒழிப்பதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. எனவே நீட்டை ஒழித்துக்கட்ட மக்கள் படை திரண்டெழ வேண்டும்; அதற்குத் துணை நிற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றே உறுதியளிக்கிறோம்” என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரபீக் அகமது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button