போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு: விசாரணையில் பல்கலைக்கழக பேராசிரியர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(41). இவர் கரூரில் ஜெயா கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி தன்னை ஒரு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என மக்களுக்கு மருத்துவம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக வந்துள்ளார். அப்போது மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள் இவரது சான்றிதழ்களை சரிபார்த்த போது, அனைத்து சான்றிதழ்களும் போலி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அப்போதே மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள் இவர் மீது புகார் அளித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஜெயபாண்டி 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், தானொரு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்றும் தன் மீது மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள் அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என்றும் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது இவரது சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என்பதும் இவர் மருத்துவம் படிக்கவில்லை என்பதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து இவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் தனது வழக்கறிஞரான உயர்நீதிமன்ற வழக்கறிஞரை சந்திப்பதற்கு இவர் சென்னை வந்திருந்தார். ஜெயபாண்டி கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பதை அறிந்த அரும்பாக்கம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவரைப் பற்றியும், மருத்துவம் படிக்காமல் மருத்துவராக பணியாற்றி வரும் பல போலி மருத்துவர்கள் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இவர் எம்.எஸ்.சி சைக்காலஜி மற்றும் மெடிக்கல் கடை நடத்துவதற்கான ஞி ஜீலீணீக்ஷீனீ போன்ற படிப்புகளை மட்டுமே படித்துள்ளார் என்பது தெரியவந்தது. தன்னை மருத்துவராக பதிவு செய்வதற்காக போலியான எம்.பி.பி.எஸ் சான்றிதழ், அரசு எம்பளம், மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகளின் கையொப்பம் போன்றவை போலியாக தயாரித்து சான்றிதழ் தயாரித்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
திருச்சியை சேர்ந்த நேஷனல் போர்டு ஆஃப் ஆல்டெர்னேட்டிவ் மெடிசின் என்ற அமைப்பை நடத்திவரும் மருத்துவரான செல்வராஜ் என்பவர் ரூபாய் 15 லட்சத்திலிருந்து 25 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு போலி மருத்துவர்களுக்கான போலி சான்றிதழ்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
டாக்டர் கவுதம், டாக்டர் மார்டின் தேவ பிரசாத் ஆகியோருடன் இணைந்து போலியாக மருத்துவ சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் போலி மருத்துவரான ஜெயபாண்டியுடன் அவரது பேட்ச்சில் (தீணீtநீலீ) மட்டும் 16 நபர்களிடம் ரூபாய் 20-25 லட்சம் பணம் பெற்று அவர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ் அளித்து இருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள போலி மருத்துவர் ஜெயபாண்டி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இவர் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், போலியாக அரசு ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்கள் மூலம் மோசடியில் ஈடுபடுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இவரை, சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டிருக்கும் போலி மருத்துவர் ஜெயபாண்டி அளித்த வாக்குமூலத்தின் படி, திருச்சியை சேர்ந்த மருத்துவர் செல்வராஜ், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர்கள் டாக்டர் கவுதம், டாக்டர் மார்டின் தேவ பிரசாத் மூன்று பேரும் இணைந்து ஒரு வருடத்தில் மட்டுமே 15 நபர்களுக்கு மேல் போலி மருத்துவ சான்றிதழ்கள் தயார் செய்து கொடுத்தார்கள் என்றால் இவர்கள் மொத்தமாக எத்தனை நபர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ் அளித்து இருப்பார்கள் என போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், மருத்துவர் செல்வராஜ், மருத்துவப் பேராசிரியர்களான டாக்டர் கௌதம் மற்றும் டாக்டர் மார்ட்டின் தேவ பிரசாத் ஆகிய மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் இவர்கள் 100-க்கும் அதிகமான நபர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ் அளித்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
– ராபர்ட்ராஜ்