பொம்மை நாடகம் போல நடத்தப்பட்ட கிராம சபைக்கூட்டம் : ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு சடடப் பிரிவு 243 ஜி குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவார். அரசாங்கத்தின் பொது உத்தரவுகளுக்கு உட்பட்டு, கிராம சபைக் கூட்டம் ஒரு ஆண்டில் இரண்டு முறையாவது நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டம் குறிப்பாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களின் போது கிராம ஊராட்சித் தலைவரால் கூட்டப்பட வேண்டும். தவறினால் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரியால் நடத்தப்படும்.
மேலும் ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் 10% பேர் கட்டாயமாக கூட்டத்தில் கலந்து கொண்டால் மட்டுமே அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லுபடி ஆகும் என பல்வேறு சாராம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குருவன்வலசு கிராமத்தில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசெல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் பயண் பாட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார கழிப்பறை பராமரிப்பின்றி பழுதடைந்து காட்சி பொருளாக காணப்படுகிறது, இதனால் திறந்த வெளியில் மகளிர் இயற்கை உபாதைகள் கழிக்க வேண்டிய சூழல் உள்ளதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்றத் தலைவர் “தற்பொழுது அனைவரது வீட்டிலும் கழிவறைகள் உள்ளதாகவும் அதனால் அதை பராமரிக்க பெரிய அளவில் கவனம் செலுத்தப்படவில்லை” என பதில் அளித்தார். ஊராட்சி மன்றத் தலைவரின் இந்தப் பதில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் கழிவறையை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்றால், அரசு திட்டத்தின் கீழ் சுகாதார கழிப்பிடம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே என்று பொது மக்கள் கேட்க கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் பிரதான தார் சாலையின் அருகாமையில் உள்ளதால் அடிக்கடி குழந்தைகள் வெளியே வரும்பொழுது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பின்னர் தீர்மானங்கள் முழுமையாக வாசிக்கப்படாமல் தீர்மான பதிவேட்டில் 100 நாள் வேலை ஆட்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவில் கலந்து கொண்டுள்ள பாமர மக்களிடம் கையெழுத்து, கைரேகைகளை வாங்கியுள்ளனர். கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்துள்ளனர்.
மேலும் அனைத்து துறைகளிலும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கும் நிலையில் பல்வேறு அரசுத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளாமல், கலந்து கொண்ட ஒரு சில அரசு அலுவலர்களும் மக்களிடையே தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசாமல் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கான வெறும் கையெழுத்து மட்டும் பதிவு செய்துவிட்டு டீ மட்டுமே குடிப்பதற்காக வந்தது போல சென்றது பாமர மக்களை ஏமாற்றும் செயலாக இருந்தது.
மக்களின் பிரச்சினைகள், ஊராட்சி மன்றத்தின் நடைமுறை வரவு செலவுகள், ஊராட்சி செயல்படுத்த இருக்கும் புதிய திட்டங்கள், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் முக்கியமான “கிராம சபை” கூட்டத்தை பொம்மை நாடகம் போல நடத்தும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சாதிக்பாட்ஷா