பிரேத பரிசோதனைக்கு ஊழியர் லஞ்ச வசூல்!
உடுமலை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கு, லஞ்சம் கேட்டு வாங்கும் ஊழியரின் வீடியோ, உலா வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவ மனையில், பிரேத பரிசோதனை செய்ய, 3,000 ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது.
1,500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பரிசோதனை செய்ய முடியும் என, ஊழியர் ஒருவர் ‘கறார்’ லஞ்ச வசூலில் ஈடுபடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. கணவர் – மனைவி இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு வந்த போது, அரசு மருத்துவமனை மருந்தாளுனர் மிரட்டி, லஞ்சப்பணம் கேட்டு வாங்குகிறார்.
அந்த வீடியோவில், ‘ஏழைகள்… இரு சடலங்களுக்கும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் பணம் இல்லை; அனுசரித்து நல்லபடியாக முடித்து தாருங்கள்’ என, உடன் வந்தவர்கள், பேச்சு நடத்துவது போல், காட்சி உள்ளது.பின், அந்த ஊழியர் தொகையை பெற்று, தன் டேபிள் விரிப்புக்கு கீழ், பணத்தை வைக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது.
இது குறித்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியிடம் கேட்டபோது, ‘’சம்பந்தப்பட்ட மருந்தாளுனர் மாதவன் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.