65 லட்சம் முதல் 70 லட்சம் வரை லஞ்சம்… : வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு !
மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகுதி இல்லாத நபர்களை பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணை வழங்கியதாக ஏற்கனவே இருந்த கல்லூரி நிர்வாகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. 18 உதவி பேராசிரியர்கள், கல்லூரியின் 20 அலுவலக ஊழியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதில் நடைபெற்ற முறைகேடுகளை சிபிஐ விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக முறைகேடு புகாரில் சிக்கிய முன்னாள் நிர்வாகிகள் சார்பில் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இந்த முறைகேடு புகாரில் வக்பு வாரிய தலைவராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த அன்வர்ராஜா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், ஆட்சி மன்ற குழுவினர் ஆகியோர் ஒரு பேராசிரியர் பணி நியமனத்துக்கு அறுபத்தி ஐந்து லட்சம் முதல் எழுபது லட்சம் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். வக்பு வாரிய கல்லூரியின் நிர்வாகத்தில் பதினொறு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இதில் நான்கு பேர் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள். இரண்டு பேர் தமிழக அரசின் பிரதிநிதிகள், ஒருவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி இவர்களுடன் வக்பு வாரிய தலைவர், நியமன உறுப்பினர், மேனேஜ்மென்ட் உறுப்பினர் மற்றும் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட இந்த பதினொரு பேர் கொண்ட கல்லூரியின் நிர்வாக குழுவினர் பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட சில பதவிகளுக்கு ஆட்களை நியமித்ததில் முறைகேடு நடந்திருப்பது குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டில் கல்லூரியின் செயலாளர் ஜமால்மொய்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கல்லூரியின் செயலாளர் அறையில் பேராசிரியர் நியமனத்திற்கு சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பேரம் பேசும் வீடியோ பதிவு நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. மேலும் ஒரு நிர்வாகி சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை வாங்கி தனது வாகன ஓட்டுநரிடம் கொடுத்து காரில் வைக்கிறார். அவர் உரையாடும் பதிவுகளும் கிடைத்துள்ளது.
வக்பு வாரிய கல்லூரியின் பொதுக்குழு உறுப்பினர்கள் முப்பத்து இரண்டு பேர். இவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களித்து நான்கு பேரை தேர்வு செய்வார்கள். தற்போது இந்த முப்பத்தி இரண்டு பேருமே முறைப்படி ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினர் பதவியை புதுப்பிக்காமல் இருப்பதாக தெரிகிறது. அடுத்து நடைபெற இருக்கும் தேர்தலில் இவர்கள் அனைவருமே வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளதாக தெரிகிறது.
வக்பு வாரிய கல்லூரியின் செயலாளராக ஜமால் மொய்தீன் பதவி ஏற்றபோது சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றதும் சர்ச்சையாக பேசப்பட்டது. வக்பு வாரியத்திற்கும், கூட்டுறவு துறைக்கும் என்ன சம்பந்தம்? பேராசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜமால் மொய்தீன். அவர் பதவி ஏற்புக்கு செல்லூர் ராஜூ வருகிறார் என்றால் கல்லூரி பேராசிரியர் நியமனத்தில் செல்லூர் ராஜூ தலையீடு இருக்குமோ என சந்தேகிக்கிறார்கள்.
தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் முஹமது ஜான் புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளதால் இவருக்கு முன் தலைவராக இருந்த அன்வர் ராஜா தலைமையின் கீழ் செயல்பட்ட தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பல்வேறு புகார்கள், சிபிஐ விசாரணை, வக்ப் போர்டு கல்லூரியில் பேராசிரியர்கள் போராட்டம் போன்ற பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தவறு செய்த ஊழல் பெருச்சாளிகளை சிறையில் தள்ள சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்கும் சவாலான பணிகள் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள முகமது ஜானுக்கு உள்ளது.
பேராசிரியர்கள் பணி நியமனம் குறித்து நிர்வாக குழுவினர் யார் யாருக்கு பரிந்துரை செய்தார்கள், பரிந்துரை செய்தவர்கள் தொலைபேசி எண், அவர்கள் எந்த துறைக்கு பரிந்துரை செய்தார்கள் என்ற முழுவிபரத்துடன் ஆடியோ பதிவுகளுடன் விரிவான செய்திகளோடு அடுத்த இதழில் பார்க்கலாம்.
(தொடரும்…)