சென்னையின் புறநகர் பகுதியான வில்லிவாக்கம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நீர் நிலைப் புறம்போக்கு இடத்தை சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த குஜராத் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நபர்கள் ஆக்கிரமித்து பிரம்மாண்டமான வணிக வளாகம் கட்டி வருகிறார்கள். நீர் நிலை புறம்போக்கு இடத்தில் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுபடி சமீபத்தில் ஏ.சி.சண்முகத்தின் கல்வி நிலையத்தை சென்னை உயர்நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே !
வில்லிவாக்கத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த சிங்காரம்பிள்ளை என்பவர் பெயரில் சிங்காரம் பிள்ளை பள்ளி 1959ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அமைந்திருக்கும் இடமானது சர்க்கார் புறம்போக்கு வகையைச் சார்ந்த ஏரி நிலமாகும். இந்த இடத்தை சரஸ்வதி பாண்டுரங்கன் (அதாவது சிங்காரம் பிள்ளை பள்ளி) என்ற பெயரில் பட்டா மாறுதல் செய்ய முயற்சி செய்துவருவதாக அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு புகார்களை நம்மிடம் தெரிவித்ததையடுத்து நமது குழுவினர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்த பள்ளி அமைந்திருக்கும் நிலமானது ஏரி என்பதற்கான முந்தைய ஆவணங்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், சென்னை உதவி இயக்குனர் ஆவண காப்பகத்திலும் பெறப்பட்டுள்ளது. நீர்நிலை சம்பந்தமாக உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவுகளின்படி நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டும், மேற்படி நிலத்தை யார் பெயரிலும் பட்டா வழங்காமல் தடுக்கும் வகையில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர், அமைந்தகரை வட்டாட்சியர் இருவரிடமும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளி ஏற்கனவே நெடுஞ்சாலையின் முகப்பு பகுதியில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டிடத்தை குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் பணத்தைக் கொடுத்து ஆக்கிரமித்ததோடு இந்த கட்டிடத்திற்கு பின்புறம் இருந்த இடத்தில் பள்ளிக்கு கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார். ஏற்கனவே இருந்த பள்ளியின் கட்டிடத்தை வணிக ரீதியான கட்டிடமாக மாற்றி வருகிறார். சென்னை மாநகராட்சி எல்லையில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமானால் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏற்கனவே இருந்த கட்டிடத்தை தற்போது இரண்டடுக்கு கட்டிடமாக கட்டுவதற்கும் எந்தவித அரசு அனுமதியும் பெறாமல் கட்டிடப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர், தலைமை பொறியாளர் (கட்டிடப்பிரிவு, பொது) நிர்வாக பொறியாளர், மண்டல அலுவலர் ஆகியோரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவறான பத்திரங்கள் தயார் செய்து முறைகேடாக அரசு புறம்போக்கு ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டி வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் நம்மிடம் கூறுகையில், இந்தப் பள்ளி இயங்கி வந்த அரசு புறம்போக்கு ஏரி நிலத்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகமாக மாற்றி வருகிறார்கள். இதனால் பள்ளிக் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த காலி இடத்தில் தற்போது கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி இயங்கி வருகிறது. ஆக்கிரமிப்பு செய்த கட்டிடத்தை இடித்து தமிழக அரசு அந்த இடத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
ஆக்கிரமிப்பு செய்த குஜராத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரிடம், வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் இந்த கட்டிடத்தை தனது மகனுக்காக பதினைந்து லட்சம வாடகைக்கு பேசி கட்டிடப் பணிகளை துரிதப்படுத்தி வருவதாகவும், அரசு புறம்போக்கு ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இணைப்பு கிடைக்கவில்லை. அவர் விளக்கம் அளித்தால் அடுத்த இதழில் வெளியிடுவோம்.
இந்த பிரச்சனை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும், அரசு புறம்போக்கு எரி நிலம் ஆக்கிரமிப்புக்கு போலியான பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களிடமும் விளக்கத்தைப் பெற்று அடுத்த இதழில் விரிவாக பார்க்கலாம்.
(தொடரும்…)
– சூரியன்