தமிழக கேரள குழு நதிநீர் பங்கீடு பேச்சு..!
தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சினைகள் குறித்து அமைக்கப்பட்ட இருமாநில குழுவினர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே. மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் திரு சுப்பிரமணியன் கோவை மண்டல தலைமை பொறியாளர் திரு விஸ்வநாத் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், முழுமையாக தமிழக கேரள நதிநீர் பிரச்சனைகளை பேசப்பட்டதாக தெரியவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு, திருநெல்வேலி மாவட்டம் அடவிநயினார் அணை பிரச்சனை, வாசுதேவநல்லூர் அருகே செண்பகவல்லி அணை இடிப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அழகர் அணை திட்டம் என பல பிரச்சனைகள் பேச்சுவார்த்தை பட்டியலில் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி.
ஆனைமலையாறு – நல்லாறு அணைத்திட்டம் பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தில் நதிநீர் பங்கீடு குறித்து தமிழக கேரள குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு, தமிழக அரசு சார்பில், பி.ஏ.பி., திட்டம் மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்துக்காக தலா, ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதுபோன்று, கேரள நீர் பாசனத் துறையும் ஐந்து பேர் கொண்ட இரு குழுக்கள் அமைத்துள்ளது . இரு மாநில குழுவின் முதற்கூட்டம், கடந்தாண்டு டிச-12ம் தேதி சென்னையில் நடந்தது. அதன்பின் கூட்டம் நடக்கவில்லை. இந்நிலையில், இரு மாநிலகுழுவின் இரண்டாம் கட்ட கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு ,இக்கூட்டத்தில் கோவை மாநகரத்தின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்யும் சிறுவாணி அணை பிரச்சனை குறித்தும் பேசப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
பி.ஏ.பி., அதிகாரிகள் கூறியதாவது: கேரள மாநிலம், திருவனந்தபுரம் சுற்றுலா மேம்பாட்டு கழக ஓட்டலில் தமிழக-கேரள மாநில அளவிலான அரசு செயலர்கள் அளவிலான நடந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள ஆனைமலையாறு-நல்லாறு அணைத்திட்டம் ஒப்பந்தம் மறு ஆய்வு, பாண்டியாரு-புன்னம்புழா திட்டம் செயல்படுத்தி பவானி அணைக்கு தண்ணீர் திருப்பும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் மற்ற நதி நீர் சிக்கல்களை விவாதிக்கவில்லை என்பது கவலையான விடயம்.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்