விழிப்புணர்வு பணிக்காக மாநகராட்சி ஊழியருக்கு சாதனையாளர் விருது
கொரோனா நோய்த் தொற்று ஆரம்பித்த சமயத்தில், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக ஆவடி மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அப்துல் ஜாபர் பாடல்கள் பாடினார். இவரது பாடல்கள் அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் பிரபலமானது. குறிப்பாக உள்ளாட்சித் துறை ஊழியர்களின் கவனத்தை ஈர்த்தது.
கொரோனா நோய்த் தொற்று தீவிரமான சமயத்தில், யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சமயத்தில் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று சேர்க்கும் பணியைச் சிறப்பாக செய்தமைக்காக அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
கொரோனா சமயத்தில் விழிப்புணர்வுக்காக பாடல்களைப் பாட ஆரம்பித்த அப்துல் ஜாபர், தற்போது அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது. இவரது சேவையைப் பாராட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
சில தனியார் அமைப்புகளும் இவரது சேவையைப் பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.