அரசு மருத்துவமனையில் மர்ம விலங்கு நடமாட்டமா.!.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் மர்ம விலங்கு நடமாடுவதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள கரடிவாவியில் அமைந்துள்ளது கே.ஜி. லட்சுமிபதி அரசு மருத்துவமனை. 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை கடந்த 2013 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் திறக்கப்பட்ட மருத்துவமனை தற்போது பாழடைந்த கட்டிடமாக காட்சி அளிக்கிறது.
மேலும் புதர் மண்டிக்கிடக்கும் இந்த மருத்துவமனை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக உள்நோயாளிகள் அனுமதிக்கபடாத நிலையில் காலை வழக்கம்போல் மருத்துவமனை ஊழியர்கள் வந்து பார்த்தபோது மருத்துவமனையின் முன்புற கண்ணாடி உடைந்திருந்தது. மேலும் கதவை திறந்து பார்த்தபோது கணனி உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் தரையில் விலங்குகளின் கால் தடம் பதிந்திருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பூட்டியிருந்த மருத்துவமனைக்குள் எவ்வாறு விலங்கு புகுந்தது என குழம்பிப்போய் உள்ளனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தடையங்களை சேகரித்து எடுத்துச்சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் மர்ம விலங்கின் கால் தடம் பதிந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள், நிறுவனங்கள், குடியிருப்புக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மர்ம விலங்கு நடமாட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.