தமிழகம்

அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி..!

மதுரையில் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரிகளின் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 40 லட்சம் ரூபாயை சுருட்டிய தம்பதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்ற பொறியியல் பட்டதாரியை சந்தித்த சக்திவேல் பாண்டியராஜன், தான் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ.ஓ வாக பணி செய்வதாகவும், தனது மனைவி காமேஸ்வரி மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரி எனவும் கூறி அறிமுகமாகியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையில் அதிகாரியாக வேண்டுமானால் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும், வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வீடுதேடிவரும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

காளிதாஸ் பணம் கொடுப்பதற்கு முன்பாக, காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போன் செய்து “பாண்டியராஜன் என்ற பெயரில் அதிகாரி உள்ளாரா?” என விசாரித்துள்ளார். அங்கிருந்து ஆமாம் என்று கூறியுள்ளனர். அதே போல மீனாட்சி அம்மன் கோவிலில் விசாரித்த போதும் காமேஸ்வரி என்ற பெயரில் அறநிலையத்துறை அதிகாரி இருப்பது தெரியவந்ததால், தங்கள் வீட்டிற்கு வரவைத்து சக்திவேல் பாண்டியராஜனிடம் 5 லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுத்துள்ளார் காளிதாஸ்.

அதன் பின்னர் வேலைக்கான அழைப்பாணை வராத நிலையில், வீட்டிற்குச் சென்று பணத்தை திருப்பிக் கேட்டதும் மறுநாளே அரசு முத்திரையுடன் கூடிய வேலைக்கான பணி நியமன ஆணையை ஆளுக்கொன்றாக தூக்கிக் கொடுத்துள்ளார் சக்திவேல் பாண்டியராஜன். அப்போதும் “இது கொரோனா காலம் என்பதால் கோவில் அலுவலகங்களுக்கு எல்லாம் விடுமுறை விடப்பட்டுள்ளது. நிலைமை முழுவதும் சரியான பின்னர், பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று சக்திவேல் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர் கொடுத்த பணி ஆணையை கோவில் நிர்வாகி ஒருவர் பார்த்துவிட்டு, இது போலியானது என கூறியுள்ளார். இதையடுத்து, காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு பணிபுரியும் சக்திவேல் பாண்டியராஜன் வேறு நபர் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல மீனாட்சி அம்மன் கோவிலில் விசாரித்தபோது அங்கு பணிபுரியும் காமேஸ்வரியும் வேறு நபர் என்பதும், பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி சக்திவேல் பாண்டியராஜன் வேலையில்லா பட்டதாரிகளிடம் தனது மோசடி வேலையை காட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, வேலைக்காக பெற்றோரிடம் வாங்கிக்கொடுத்த லட்சங்களைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த சக்திவேல் பாண்டியராஜனிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தரக் கோரி அதே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

காளிதாஸ் போல 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சக்திவேல் பாண்டியராஜனை நம்பி லட்சங்களை அள்ளிக்கொடுத்து ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்துவிட்டு நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

தற்போது நடவடிக்கை எடுக்க மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவம் கிடைக்கும் இந்த வேலையில்லா பட்டதாரிகள் பணம் கொடுப்பதற்கு முன்பாக அரசு வேலைக்குச் செல்ல இதுதான் வழிமுறையா? என்பதையும் சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் பணிபுரிகின்றாரா ? என்பதையும் விசாரித்து அறிந்திருந்தால் இதுபோன்ற மோசடி சம்பவம் அரங்கேறி இருக்காது என்கின்றனர் காவல்துறையினர்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button