மணல் கடத்தல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் – : உயர்நீதிமன்ற மதுரை கிளை
சிவகங்கை மாவட்டம் மணலூர் அகழாய்வு பணிகள் நடைபெறும் பகுதியில் சவுடு மண் எடுப்பதாக கூறி அனுமதி பெற்று, மணல் அள்ளப்படுவதால் அரசு அனுமதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் மணல் எடுக்கப்படுகிறது?,
சவுடு மண் எடுப்பதற்கு பெறும் அனுமதி முறையாக பின்பற்றப்படுவதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர். மேலும் மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும், இது தொடர்பாக தினமும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வருவதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.