புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த கைதிகள் சதித் திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை
புழல் சிறையின் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவின் உயிருக்கு கைதி ‘போலீஸ்’ பக்ரூதீனால் ஆபத்து உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு விதிகளை மீறி படுக்கை, டி.வி., செல்போன், சமையலறை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு, அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படங்கள் வெளியாயின.
கொரில்லா சிறை என பேச்சுவழக்கில் சொல்லப்படும் இந்த பகுதியில் இருந்து 2 தொலைக்காட்சி பெட்டி, 200 கிலோ பிரியாணி அரிசி, வாசனை திரவியங்கள் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்த அய்யப்பன் உட்பட 6 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியானதற்கு சிறைத்துறை அதிகாரிகளே காரணம் என முடிவு செய்த கைதிகள், அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புழல் சிறை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்து உளவுத்துறை அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘போலீஸ்’ பக்ருதீன், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையா மீது தாக்குதல் நடத்த சதித் தீட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்தியது, கைதிகளுக்கு செல்போன்கள் வழங்கியதை தடுத்தது மற்றும் ‘போலீஸ்’ பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், ஆகியோரின் செல்போன் உரையாடல்களை ஜாமர் கருவிகள் கொண்டு தடுத்தது போன்ற காரணங்களுக்காக ஆய்வாளர் சுப்பையாவை கொலை செய்ய சதி தீட்டியிருப்பதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது.
மேலும், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்ட கைதி அய்யப்பனுடன் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், பக்ருதீன் ஆகிய மூவரும் தொடர்புடன் இருப்பதாகவும், அவர் மூலம் புழல் சிறையில் உள்ள கைதிகளை தொடர்புகொள்ள மூவரும் முயற்சித்து வருவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆய்வாளர் சுப்பையாவின் ஒட்டுனர் ராமசாமியுடன் அய்யப்பன் பேசி வருவதை அறிந்த அந்த மூவரும், சுப்பையா குறித்த தகவல்களை ராமசாமி மூலம் திரட்டி தருமாறு கேட்டுக் கொண்டதும் உளவுத்துறை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அய்யப்பன் மற்றும் ஓட்டுநர் ராமசாமி மூலம் சுப்பையாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.