தமிழகம்

தண்ணீர்… தண்ணீர்… : தவிக்கும் தமிழ்நாடு

தமிழத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி நிலவி குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னைக்கு கடந்த வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், குடிநீருக்காக மக்கள் குடங்களுடன் திண்டாடும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அணைகளில் தற்போது 18% நீர் இருப்பு மட்டுமே உள்ளது என்ற அபாய செய்தி வெளியாகியுள்ளது.
தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வடகிழக்கு பருவ மழையில் நல்ல மழை இல்லை. குறிப்பாக சென்னையில் பருவ மழை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது குடிநீருக்குக் கூட மக்கள் குடங்களுடன், லாரி நீரை எதிர்பார்த்து காத்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு அணைகளில் வெறும் 18% நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இந்த நீரும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வரும். இதுவும் ஆற்றை நம்பி இருக்கும் அணைகளின் நிலையாக உள்ளது.


தற்போது ஒரு நாளைக்கு 1830 மில்லியன் லிட்டர் நீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பெரிய அளவில் நீர் பஞ்சம் இல்லை என்றே அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன. காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆறுகளைப் பயனபடுத்தி 550 குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருக்கும் நீர் 120 நாட்களுக்கும், கொள்ளிடம் ஆற்றின் நீர் 100 நாட்களுக்கும் துணை நிற்கும். காவிரியை நம்பி 128 நீர் வழங்கல் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காவிரி நீரை நம்பி இருக்கும் இந்த அணையில் தற்போது 20 டிஎம்சி அடி நீர் மட்டுமே இருப்பாக உள்ளது. இதன் மொத்தக் கொள்ளவு 93 டிஎம்சி அடியாகும். காவிரி நீரைப் பெறும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் வீராணத்துக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து அரசு மூத்த அதிகாரி அளித்த பேட்டியில், ‘’கடந்த வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் சென்னையில் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதமே எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், இருக்கும் ஆழ்துழாய் கிணறுகளை மேலும் ஆழமாக்குவதற்கும். போதிய ஆழ்துழாய் கிணறுகளை தோண்டுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது’’ என்றார்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சுமார் 59% மக்களுக்கு மட்டுமே நீர் வழங்கி வருகிறது. மற்றவர்களுக்கு உள்ளூர் அமைப்புகள் வழங்கி வருகின்றன. தெற்கில் ஐந்து மாவட்டங்களுக்கு முல்லை பெரியார் அணையில் இருந்து நீர் வழங்கப்படுகிறது. தற்போது இந்த அணையில் இருக்கும் நீரால் 90 நாட்களுக்கு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 33.89 மில்லியன் லிட்டர் நீர் வழங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. வைகை அணை நீரைக் கொண்டு 68 நீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தற்போது வெறும் 14% நீர் மட்டுமே உள்ளது. 60 கன அடி நீர் இந்த அணைக்கு தற்போது வந்து கொண்டிருக்கிறது. மேற்கில் பவானி சாகர் மற்றும் பிஏபி திட்டங்களை எடுத்துக் கொண்டால், இவற்றின் நீர் 150 நாட்களுக்கு மட்டுமே உதவும். பில்லூர் அணையில் இருக்கும் நீர் 170 நாட்களுக்கு உதவும் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் அதிகாரிகள் அளித்த பேட்டியில், ‘’கடந்த பருவ மழைக்குப் பின்னர் நிலத்தடி நீர் மட்ட ஆதாரம் 13.7மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது. முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது பரவாயில்லை. வரும் மே மாதத்தில் நிலத்தடி நீர் மட்ட ஆதாரம் மேலும் 16.9 மீட்டர் அளவுக்கு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது’’ என்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தின் 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் ஒரு குடம் நீர் ரூ. 15 வரை விற்கப்பட்டு வருகிறது. மழை வந்தால் மட்டுமே தமிழகம் தப்பிக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது.
கோடைகாலத்தில் அணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பராமரிப்பு குறித்து மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் வி.ராஜேஷ் செயல்பட்டு வந்தார். தற்போது ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது துணைக் கண்காணிப்பு குழுவில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார், தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக சென்றனர். தமிழக அதிகாரிகள் தமிழக படகிலும், கேரளா அதிகாரிகள் கேரளா அரசு படகிலும் சென்றனர்.கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம்தேதி அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருந்தபோது ஆய்வு செய்யப்பட்டது. தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் அவர்கள் தலைமையில் நீர்மட்டம் 112.80 அடியாக குறைந்துள்ள நிலையில் பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதத்தக்கது.


இந்த குழு பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.இதைத்தொடர்ந்து குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காலிக் குடங்ளை கைகளில் கொண்டு தண்ணீருக்காக பெரியோர்களும் சிறுவர்களும் காத்திருக்கும் நிலையை சென்னையில் உள்ள பல குடிசை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் காண முடிகிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் தலைநகரின் மக்கள் தொகைக்கேற்ப, தண்ணீர் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. போதிய அளவில் பெய்யாத பருவ மழை, வறண்ட நிலையில் உள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான ஏரிகள் , குறைந்துக்கொண்டே போகும் நிலத்தடி நீர் மட்டம் என பல்வேறு காரணங்களால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு கடந்தகாலங்களை விட தற்போது அதிகரித்துள்ளது .
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள தேனாம்பேட்டை நக்கீரன் நகர் குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் லாரி மூலம் விநியோகம் செய்யப்படுவதாகவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுக்கப்படும் பத்து குடம் நீர் அடிப்டை தேவைகளுக்கே போதவில்லை என வேதனையடைகிறார் மூதாட்டி ஒருவர்.
சமீபகாலமாக அடிபம்புகளில் தண்ணீர் சரியாக வருவதில்லை எனவும் எப்போதாவது வரும் தண்ணீரும் துற்நாற்றத்தோடு வருவதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுகிறார் முலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண்.
பகல் இரவு என மாறி மாறி தண்ணீர் வருவதால், பணிக்குச் செல்பவர்கள் தண்ணீர் பிடிப்பதில் சிக்கல் உள்ளதாகவும், குறித்த நேரத்தில் தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர் திநகரில் உள்ள மக்கள்.
தற்போது இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணித்து தமிழக அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவே ஏரிகள் வறண்ட போதிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கல்குவாரிகளில் இருந்து நீர் எடுக்கும் திட்டம் போன்ற திட்டங்களால் மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உள்ளதாக கூறும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள், குழாய் வழியாக நீர் வினியோகிக்க முடியாத குடியிருப்பு பகுதிகளுக்கும் கூட லாரிகளை கொண்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக விளக்கமளிக்கின்றனர் .
முன்பு, நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்ட சென்னை மாநகரில் தற்போது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிப்பதற்கு பதிலாக தினசரி குறைந்தது பத்து குடம் தண்ணீராவது தடையில்லாமல் தர வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button