எலும்பு வங்கி ஆச்சர்யமூட்டும் தகவல்கள்..!
ரத்தவங்கி, தோல் வங்கி போன்று சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய எலும்பு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. புற்று நோய் மற்றும் விபத்தால் எலும்பு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு குறைந்த செலவில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவ மனைகளில் அமைக்கப்பட்டுள்ள ரத்த வங்கிகள் மூலம் தானமாக பெறப்பட்ட ரத்தம் தான் விபத்தில் படுகாயம் அடைந்த பல்லாயிரம் பேரின் உயிரை தினமும் காத்து வருகின்றது.
அதே போல தானமாக பெறப்படும் தோலை பயன்படுத்தி தீக்காயத்தால் உருகுலைந்த பலருக்கு மறுவாழ்வு அளித்து வருகின்றனர் நமது மருத்துவர்கள்..!
அந்தவகையில் இந்தியாவிலேயே மிகபெரிய எலும்பு வங்கி, சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டாரி சங்கத்தின் உதவியுடன் 80 லட்சம் ரூபாய் செலவில் அதி நவீன பாதுகாப்பு உபகரணங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. எலும்பு புற்று நோய் மட்டுமல்லமல் விபத்தில் சிக்கும் 80 சதவீத பேருக்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றது. அதனை கருத்தில் கொண்டு எலும்பு வங்கியை தொடங்கி உள்ளனர். மூளை சாவடைந்தவர்கள்,எலும்பு தானம் கொடுப்பவர்களிடம் சேகரிக்கப்படும் எலும்புகள் வேதிப்பொருட்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, அதில் எய்ட்ஸ்,மஞ்சள் காமாலை கிருமிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர். பின்னர் குளிர்சாதன பெட்டியில் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ்சில் வைத்து பல வருடங்களுக்கு பாதுகாத்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இறந்தவர்கள் உடலில் இருந்து தானமாக பெறப்படும் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், ஆகிய உறுப்புகளை உடனடியாக பொறுத்த வேண்டும். ஆனால் தானமாக பெறப்பட்ட எலும்புகளை 12 மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த இயலும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவரிடம் தானமாக பெற்ற எலும்புகளை குறைந்த பட்சம் 20 பேருக்கு பொறுத்த இயலும். பெரிய எலும்புகளை அப்படியே பயன்படுத்தலாம் என்றும் சிறிய எலும்புகளை பொடி செய்து பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் மருத்துவர்கள்.
அயல் நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்த எலும்பு மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவிற்குள் டாடா குழுமத்தால் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை வரவிடாமல் மருத்துவ மாஃபியா கும்பல் தடுத்துவிட்டதாக கூறப்படுகின்றது. எலும்புக்கு பதிலாக ஸ்டீல் பிளேட்டு, ராடு, நட்டுக்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு அறுவை சிகிச்சையிலும் லட்சகணக்கிலும் பணத்தை அள்ளி வருவதால், தனியார் மருத்துவமனைகள் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை ஊக்குவிப்பதில்லை என்று கூறப்படுகின்றது.
காரணம் ஸ்டீல் ராடுக்கு பதிலாக எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அதிக பட்சம் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாயிலேயே அறுவை சிகிச்சை செய்ய இயலும் என்பதால் தங்களின் வருமானம் பாதிக்கும் என்ற சுய நலத்தால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வளரவிடாமல் சிலர் தடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. மக்களுக்கு குறைந்த செலவில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வழிவகுக்கும் இந்த எலும்பு வங்கியை சிறப்பாக பராமரித்து நீண்ட காலத்துக்கு பாதுக்காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!