கலைஞர்-100 பத்திரிகையாளர்களை புறக்கணித்த தயாரிப்பாளர்கள் சங்கம் !
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாட்டில்,கலை உலகினர் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் சங்கம் உள்ளிட்ட பிற சங்கங்கள் மூலம் அந்தந்த உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.
ஆனால் திரையுலக நிகழ்ச்சிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பணிகளை செய்துவரும் பத்திரிகையாளர்களுக்கு முறையாக அழைப்பிதழ் வழங்காமல் புறக்கணித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் இதுசம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன், மேலாளர் தினேஷ் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டும் பதில் ஏதும் கூறாமல் புறக்கணித்துள்ளனர்.
ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் இருக்கும் நிலையில் யார் யாருக்கு அழைப்பிதழ் வழங்கி அழைக்க வேண்டும் என முறையான திட்டமிடல் இல்லாததால்தான் பத்திரிகையாளர்களை முறையாக அழைக்கத் தவறி விட்டார்கள் என சில நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் இந்த விழாவில் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.