திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் கட்டிட கட்டுமான பணிகளில் முறைகேடு..! : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மருத்துவத்துறை கட்டிட கட்டுமான பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறும் போது,
கொரானா கால கட்டத்தில் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிராணவாயு செரியூட்டு அறை கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் கட்டிடங்கள் கட்டப்படாமல் ஒப்பந்ததாரர்கள் பணி முடிந்ததாக நிதியை முறைகேடாக பெற்றுள்ளதாகவும், செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கும் வீடுகள் பராமரிப்பின்றி உள்ளது. பாராமரிப்பிற்காக லட்சக்கணக்கில் செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளார். எனவே முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு செய்த போது கடந்த இரண்டு மூன்று தினங்களாகத்தான் பணி நடைபெறுவதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனை அடுத்து அங்கிருந்த ஒப்பந்த தாரரிடம் விளக்கம் கேட்ட அதிகாரிகளுக்கு கிடைத்ததோ மலுப்பலான பதில் தான். இந்நிலையில் அனைத்து மருத்துவமனையிலும் நடைபெற்றிருக்கும் மோசடி குறித்து ஆய்வு நடத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
– நமது நிருபர்