தென் மாவட்டங்களில் விடாத மழை… அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை
பெரும்பாலும் டிசம்பர் மாத இறுதியில் நிறைவடையும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு தற்போது வரை நீடிக்கிறது. இதன்காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை ஓராண்டுக்குபின் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது.
71 அடி கொள்ளவு கொண்ட வைகை அணை, தேனி. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணைக்கு தற்போது 3961 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து அதிகளவு நீர் திறந்துவிட வாய்ப்புள்ளதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரல் ஆற்றின் பழைய பாலம் நீரில் மூழ்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் காலம் கடந்தும் நிற்காத மிதமிஞ்சிய மழையால், தைமாத அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் துயறுற்று உள்ளனர்.
கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசி, சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் வயல்களில் அமர்ந்து விவசாயிகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் கனமழையால் சேதமடைந்தன.
இதனிடையே ஜனவரி 19ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவழை விலகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை, தேசிய பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்டா முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும் நீரில் முழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் விளைநிலங்களில் நீர் வடியாமல் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகியும், நெல்மணிகள் பதராகவும் மாறி உள்ளன. ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், அதனையாவது நிவாரணமாக தாருங்கள் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதுவரை ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்து அறுவடை நேரத்தில் பயிர்கள் மழைநீரீல் மிதப்பதாகவும், தொடர்ந்து தண்ணீர் வடியாததால் அழுகும் நிலை ஏற்பட்டு பயிர்கள் முளைக்க தொடங்கிவிட்டதாகவும், மறுபுறம் பயிர்கள் அனைத்தும் பதறாக போய்விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவாசாயிகளுக்கு எந்த ஒரு நிபந்தனைகள் இன்றி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
– சௌந்திரராஜன்