தமிழகம்

இந்துக்கள் மனம் இதற்கு மட்டும் புண்படுவது ஏன்? : சிற்பி ராஜன்

சிற்பி ராஜன்; சிற்பக் கலைஞர், சமூக செயற்பாட்டாளர், பெரியார்வாதி, இறைமறுப்பாளர் பல வகைகளில் அடையாளப்படுத்தப்படும் ஒரு நபர். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் கடந்த நாட்களில் இவர் பேசிய சில வீடியோக்களும் அடங்கும். இந்நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலுக்கு சிற்பி ராஜன் நிதி வழங்கி வந்தவர் என்றும், சிலை கடத்தல் வழக்கில் கைதானார் எனவும் பாஜகவை சேர்ந்த நாராயணன் குற்றம் சாட்டியுளளார்.

கறுப்பர் கூட்டம் என்பது மக்களிடையே உள்ள அறியாமையை போக்கி, பெரியாரின் சித்தாந்தத்தை முன்னிறுத்தி கருத்து கூறி வருபவர்கள்தான். நானும் பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளதால் என்னுடைய வீடியோவை அவர்கள் வெளியிடுகின்றனர்.

நிதி கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இருந்திருந்தால் அந்த சேனலுக்கு உதவியிருப்பேன். நான் நிதி வழங்கினேன் என்று குற்றம் சாட்டும் நாராயணானால் அதை நிரூபிக்க முடியாது. அதேபோல நான் சிலை கடத்தல் வழக்கில் கைதானேன் என்பதையும் நிரூபிக்க முடியாது. அப்படி ஒன்று நடந்திருந்தால் தானே!

கறுப்பர் கூட்டம் சேனலில் என்னுடைய வீடியோக்கள் இருப்பதால் தொடர்பு இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் வீடியோ கொடுப்பதோடு மட்டுமே அந்த தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது.

கடவுளை ஆபாசமாக பேசுவதாக கூறுகிறார்கள். இழிவு படுத்துவதாக கூறுகின்றனர். உண்மையில் அது சரிதான் என்றால்; கடவுள் எங்களை தண்டிக்கட்டும். விநாயகர் சிலைகளை களி மண்ணில் செய்யாமல், கெமிக்கலை பயன்படுத்தி செய்வது எவ்வளவு ஆபத்தானது.

அதனால் கடந்த வருடம் எத்தனை பேர் பலியாகியுள்ளனர்? அதேபோல சிதம்பரத்தில் கோவிலுக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு அர்ச்சனை சொல்லாமல் வெறும் சூடத்தை மட்டும் காட்டிய அர்ச்சகரை கேள்வி கேட்டதால், அந்த பெண்ணை அவர் கை நீட்டி அடித்தார். இது மக்களை புண்படுத்தியிருக்காதா?
நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், முதலில் என் வீட்டில் உள்ள குப்பையை சுத்தம் செய்ய வேண்டும். நான் பைபிள் படிக்கவில்லை, குறான் படிக்கவில்லை. எனக்கு இந்து கடவுளை பற்றியும், அதுகுறித்த கதைகளையும் தான் சிறு வயதில் படித்தேன். சிந்திக்க தொடங்கிய பின்புதான் அவை எல்லாம் கட்டுக்கதை என் புரிந்தது. ஆகையால் என் வீட்டில் உள்ள குப்பையை முதலில் அகற்றி வருகிறேன். நாத்திகம் என்ற ஒரு மதம் உருவானால் சந்தோஷமாக சேர்ந்துகொள்வேன்.

இணையத்தில் நமக்கு எந்த வீடியோ வேண்டுமோ அதை மட்டும் பார்க்க வேண்டும். இந்து கோவில்கள், பாடல்கள் என் பல வீடியோக்கள் உள்ளன. அதை மட்டும் பக்தர்கள் பார்த்து விட்டு செல்லலாமே, எதற்கு நாத்திக வீடியோக்களை பார்த்து விட்டு சர்ச்சையை உருவாக்க வேண்டும். ஒரு மதத்தை இழிவு படுத்த யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால், கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆபாச வார்த்தை என்று சொல்கிறார்கள். கந்த சஷ்டி கவசத்தில் என்ன அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை தான் கறுப்பர் கூட்டம் சேனலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் என்ன தவறு இருக்கிறது. மக்களிடம் உள்ள அறியாமையை போக்கி, விஞ்ஞான வளர்ச்சியை அவர்களிடம் தெரிவிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடைமை என்று இந்திய சட்டம் சொல்கிறது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் என கூறினார்.

& நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button