ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை, ரேஷன்கடை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கொண்டுசென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை, தமிழகம் முழுவதும் தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்தப்பகுதியில் வேகமாக வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 22 சாக்கு மூட்டையில் ( ஒரு டன் ) ரேஷன் அரிசி இருந்துள்ளது. பின்னர் ரேஷன் அரிசியை கடத்தி வந்த மனோகரன் என்பவரைப் பிடித்து விசாரணை செய்ததில், ஆந்திராவிற்கு கொண்டு சென்று கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மனோகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-கே.எம்.எஸ்