பத்திரிகையாளர் அரசு அடையாள அட்டை குளறுபடி.. ஆர்டிஐயில் அம்பலமான தகவல்கள்..
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக தமிழகம் முழுவதும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டி தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து பெற்ற கடிதத்தினையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வழங்குகிறார்கள். இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து அடையாள அட்டை வழங்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்களின் பணி. மாவட்ட ஆட்சியர்கள் பணிச்சுமை காரணமாக விண்ணப்பங்களை பெற்று சரிபார்க்கும் வேலையை அந்தந்த மக்கள் தொடர்பு அலுவலரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு அதிகாரிகள் இதனையே சாக்காக வைத்துக் கொண்டு யாருக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும், வழங்கக் கூடாது என முடிவு எடுக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல் தூங்கா நகரம் என்றழைக்கப்படும் மதுரையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் யார் யாருக்கு அரசு அடையாள அட்டை வழங்கியிருக்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் படி தமிழக அரசிடம் கேட்டிருக்கிறார். அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என பதில் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தங்கவேலுவிடம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, 2019 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியிருப்பதாக சொல்கிறார். அரசு ஆவணங்களில் மதுரை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு யாருக்கும் அரசு அடையாள அட்டை வழங்கவில்லை என்று இருக்கும்போது மக்கள் தொடர்பு அதிகாரி வழங்கப்பட்டதாக எந்த அடிப்படையில் கூறுகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தவறான தகவல்களா? மக்கள் தொடர்பு அதிகாரி கூறும் தகவல் உண்மையான தகவல்களா? என பத்திரிகையாளர்கள் புலம்புகிறார்கள்.
பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் அதிகாரம் மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு இல்லை. ஆனால் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களின் படிவங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டும் முதலில் அடையாள அட்டைகளை வழங்கியும், அரசின் பிற சலுகைகள் வழங்கியும், அரசின் பிற சலுகைகள் கிடைக்கவும் வழிவகை செய்வதாக தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் புலம்பி வருகிறார்கள்.
மக்கள் தொடர்பு அதிகாரி என்பவர் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களின் மனநிலைகளை அரசிடம் கொண்டு செல்லவும், மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து செயல்படவும் வேண்டுமே தவிர, வெயில், மழை, பேரிடர் காலங்களிலும் தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் பத்திரகையாளர்களுக்கு அரசின் அடையாள அட்டை வழங்குவதில் பாகுபாடு பார்த்து தனக்கு வேண்டிய வேண்டாதவர்கள், என பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி வருவது தொடரக்கூடாது என பெரும்பாலான பத்திரிகையாளர்கள் விரும்புகிறார்கள்.
குறிப்பாக மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தங்கவேலு துணை முதல்வரின் உறவினர் என்றும் இவர் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அரசு பதவியை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் கூறுகிறார்கள். வருவாய்துறை அமைச்சரின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நிகழ்ச்சிகளை செய்தியாக வெளியிடும் பத்திரிகைகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை தேர்வு செய்து அரசின் சலுகைகளை முதலில் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதையே தொடர்ந்து செய்து வருகிறாராம். சமீபத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டின்படி வீட்டுமனை வழங்குவதாக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு வேண்டிய நாற்பது நபர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் பரவி பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தினசரி, வார, மாதமிருமுறை, மாத இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் பணிச்சுமையிலும் அரசின் அடையாள அட்டை பெறுவதில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பருவ இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான அடையாள அட்டை இன்னும் வழங்கப்படவில்லை. அடையாள அட்டை வழங்கப்பட்டவர்கள் வாகன ஸ்டிக்கர் கேட்டு பலமுறை அலைந்தும் இன்னும் வழங்கப்படவில்லை. இதுபற்றி தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டால் அரசு நிதி ஒதுக்கவில்லை. ஸ்டிக்கர் அடிக்க பணம் இல்லை என்கிறார்.
தினசரி பத்திரிகையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தொடர்பு அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சின்ன பத்திரிகை, பெரிய பத்திரிகை என பத்திரிகையாளர்களை பிளவு படுத்தி சிலருக்கு மட்டும் அரசின் சலுகைகள் கிடைக்க ஏற்பாடு செய்து பத்திரிகையாளர்களின் ஒற்றுமையை கெடுத்து செயல்படுவதாகவும் பத்திரிகையாளர்கள் புலம்புகிறார்கள்.
எது எப்படியோ பேரிடர் காலமான இந்த கொரோனா காலத்திலும் தங்களின் உயிரை துச்சமாக கருதி பணியாற்றும் பத்திரிகையாளர்களை அலட்சியப்படுத்தாமல் முறையாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அவர்களுக்கான அரசு அங்கீகார அடையாள அட்டையையும், அவர்களுக்கு வழங்க வேண்டிய வாகன ஸ்டிக்கர் போன்ற பிற சலுகைகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
- ராபர்ட் ராஜ்