இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்க முன்வர வேண்டும் : கலெக்டர் வீரராகவராவ்
சொந்தமாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்க இளைஞர்களுக்கு பாரத பிரதமரின் முத்ரா யோஜனா கடனுதவி வழங்க தயார் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையேற்று தொடங்கிவைத்தார். இம்முகாமில் பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ முனியசாமி உள்ளிட்ட மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழவில் சிறப்புரையாற்றிய கலெக்டர் வீரராகவராவ், “இம்முகாமில் 3895 இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். லுகாஸ், டிவிஎஸ், எல் & டி கன்ஸ்ட்ரக்சன்ஸ், அப்போலோ பார்மஸி, இஎம்ஆர்ஐ (108) உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. மத்திய மற்றும் மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது போல் அவர்கள் சுயதொழில் செய்திடவும், தொழில்முனைவோராக உருவாகிடவும் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தி அதற்காக மானியமும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வமுடன் செயல்படுவது போன்று சுயதொழில் மேற்கொள்ளவும் முன்வர வேண்டும்.
இளைஞர்களின் சுயதொழில் வேலைவாய்ப்புக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 650 கோடி கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. படித்த இளைஞர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்று விடுகிறீர்கள் தொழிலாளர்கள் தொழில் முனைவோர்கள் ஆக உள்ள இளைஞர்கள் மாற்றுத் தொழில்களை தொடங்க கடனுதவி வழங்க தயாராக அரசு உள்ளது. தமிழக அரசு நெகிழி பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்துள்ளது இதற்கு மாற்றான சரியான பொருட்களை தயாரித்தால் விற்பனைச் சந்தை சிறப்பாக இருக்கும். நமது மாவட்டத்தில் 2 கோடி பனை மரங்கள் உள்ளது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
வேலை வாய்ப்புகளை தேடும் இளைஞர்கள் பனை பொருட்களில் இருந்து நெகிழிக்கு மாற்றான பொருட்களை ஏன் உற்பத்தி செய்யக்கூடாது இப்போது டெக்னாலஜி முன்னேறி விட்டது உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் மிகவும் சுலபம் ஆகிவிட்டது திறமை இருந்தால் பொருட்கள் குவாலிட்டி ஆக இருந்தால் சந்தை வாய்ப்புகள் தேடி வரும்.
வேலைவாய்ப்பு தேடிய இளைஞர்கள் வேலை கிடைத்தால் வேலைக்கு சென்று நல்ல அனுபவத்தை கற்றுக் கொள்ளுங்கள், வேலை கிடைக்கவில்லை என்றால் சொந்த தொழில் தொடங்க பாரத பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் படி 650 கோடி ரூபாய் இம்மாவட்டத்தில் கடனுதவி வழங்க தயாராக உள்ளது இளைஞர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்தார், தொடர்ந்து, தேர்வான 498 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
- சேகர்