ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
போத்தனூரில் புகைப்பட நிலையம் நடத்தி வந்த சரவணன், தனது மனைவி ஜோதி, இரட்டைக் குழந்தைகளான 10 வயது தீபகேஷ், சாரகேஷ் உட்பட 6 பேருடன் கோடை விடுமுறையை கழிக்க அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேரில் சரவணனின் மகன்கள் இருவர் உட்பட 4 சிறுவர்கள் இருந்துள்ளனர்.
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது தீபகேஷ், சாரகேஷ் உட்பட 3 சிறுவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். சுழலில் சிக்கிய மூவரையும் காப்பாற்ற பெரியவர்கள் ஒருவர் பின் ஒருவராக முயற்சி செய்து மூவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சரவணனைத் தவிர மற்ற இருவருக்கும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. கரையோரத்தில் நின்ற ஒரு சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 4 பேருடைய உடல்களை மீட்டனர். மேலும் இருவரது உடல்களைத் தேடி வருகின்றனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றிலோ, இன்னபிற நீர்நிலைகளிலோ சிறுவர்களுடன் குளிக்கச் செல்பவர்கள், அவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பை செலுத்த வேண்டும் என்பதையும் நீரின் வேகம், ஆழம் இவற்றின் தன்மை அறிந்து கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதையும் இந்த சோக சம்பவம் உணர்த்தியுள்ளது.