போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் தயாரிப்பாளர்களை ஏமாற்றி பணம் கறக்கும் கும்பல்…
சினிமாத்துறையில் படம் வெளியிடுவதற்கு முன் தினசரி பேப்பரில் விளம்பரம் செய்வதும், போஸ்டர் அடித்து ஒட்டுவதும், வாகனங்களில் ரேடியோ கட்டி பிட் நோட்டீஸ் கொடுத்து விளம்பரம் செய்வதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் சமூக வலைதளங்களில் தங்களின் படங்களை விளம்பரம் செய்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர், இயக்குனர், தொழிற்நுட்ப கலைஞர்களின் கூட்டு முயற்சியில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டு திரைக்கு வருகிறது. இதில் படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். இயக்குனருக்கு பெயரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரும். தோல்வியடைந்தால் நஷ்டம் தயாரிப்பாளருக்கு மட்டுமே. படம் வெற்றி பெறுவதற்கு நல்ல கதையும், விளம்பரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. சில பெரிய நிறுவனங்கள் சுமாரான கதையம்சம் கொண்ட படங்களைக் கூட விளம்பரங்கள் மூலம் வெற்றி பெறச் செய்கின்றனர். சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் விளம்பரங்கள் இல்லாததால் மக்களிடம் சென்றடையாததால் படம் தோல்வியை தழுவியதும் அனைவரும் அறிந்ததே. இன்றைய சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் படத்திற்குத் தேவையான பட்ஜெட் தொகை முழுவதையும் வைத்துக் கொண்டு படம் எடுப்பதில்லை. கதையின் மீதும், நடிகர்கள் மீதும் நம்பிக்கை வைத்து கடன் வாங்கியோ, சொத்துக்களை அடமானம் வைத்தோதான் பணத்தை தயார் செய்து படத்தை எடுக்கிறார்கள்.
இவ்வாறு சினிமாவை நேசித்து சினிமா மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜெயித்ததாக வரலாறு இல்லை. கஷ்டப்பட்டு எடுத்த படத்தை வெளியிட முடியாமல் மீண்டும் கடன்வாங்கி விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டு மேலும் கடன்காரர்களான தயாரிப்பாளர்கள் ஏராளம். இந்நிலையில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதாக தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆசையைத் தூண்டி பணம் சம்பாதிப்பதையே தொழிலாகக் கொண்டு சிலர் சினிமாவில் சுற்றித்திரிவதாக தெரிய வருகிறது. படம் ஆரம்பிக்கும் போதே புரமோஷன் என்கிற பெயரில் தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்து முன்பணம் வாங்கி விடுகிறார்களாம். ஒரு படத்திற்கு புரமோஷன் செய்ய 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை தயாரிப்பாளர்களை ஏமாற்றி பணம் பறிப்பதாகவும் தெரிய வருகிறது.
சமூக வலைதளங்களில் அதாவது டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் டிரெண்டிங் என்கிற பெயரில் விளம்பரம் செய்வதாக தயாரிப்பாளர்களிடம் பணத்தைப் பறித்து தங்களுக்கு வேண்டிய வெப்சைட் நடத்தும் நபர்களுக்கு விளம்பரம் கொடுத்ததாக கணக்கு காட்டுகிறார்களாம். இவர்கள் விளம்பரம் கொடுக்கும் சமூக வலைதளங்கள் எதுவும் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் உதாரணத்திற்கு டிவிட்டர் கணக்கை துவங்கி கவர்ச்சியான மற்றும் பலான போட்டோ வீடியோக்கள் பதிவேற்றம் செய்து தங்களை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் பலான போட்டோ, வீடியோக்களை அழித்துவிட்டு அந்த டிவிட்டர் கணக்கை இவர்கள் பயன்படுத்தி தயாரிப்பாளர்களிடம் அதிக பாலோவர்ஸ் இருக்கிறார்கள். விளம்பரம் செய்தால் டிரெண்டிங் ஆகும் என்று கூறி பணம் பறிப்பதாகவும் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் படங்களுக்கு விளம்பரம் வாங்கி விற்கும் ஏஜெண்டாக இருந்தவரும், டாட் காம் விளம்பர ஏஜென்டாக இருந்த இந்த இருவரும் தான் இன்று தமிழ் சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் ( CTC Media Boys ) புரமோஷன் என்கிற பெயரில் ஆட்டிப் படைக்கிறார்களாம். இவர்கள் விளம்பரம் செய்ததாக கூறும் லிஸ்டில் காலம் காலமாக சினிமாவைப் பற்றி எழுதும் சினிமா பத்திரிகையாளர்கள் யாரும் இல்லையாம். சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாமல் எங்கோ இருந்து கொண்டு சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் நபர்கள்தான் தயாரிப்பாளர்களிடம் ஏமாற்றும் பணத்தை அனுபவிப்பதாகவும் கூறுகிறார்கள். சமூக வலைதளங்கள் குறிப்பாக டிவிட்டர் மூலம் எந்தப் படமும் வெற்றி பெற்றதில்லை. குறிப்பாக சங்கத்தமிழன், பலூன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் இவர்கள் புரமோஷன் செய்த படங்கள் தான்.
இது உதாரணம் தான். இவர்களை நம்பி சில நடிகர்கள் தங்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்க இவர்களை நியமித்துள்ளார்கள். குறிப்பாக நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளத்தை நிர்வகிக்க இவர்களை நியமித்துள்ளார். தமிழ் சினிமாவுக்குள் புதிய நிறுவனங்கள் வந்தால் நடிகர் விஜய் சேதுபதியின் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி பணம் பறிப்பதாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தயாரிப்பு நிறுவனங்களில் இவர்களுக்கு விளம்பரம் வாங்கிக் கொடுப்பவர்களையும் இவர்கள் தாராளமாக கவனிக்கிறார்களாம். ஆற்றில் போகும் தண்ணீரை யார் குடித்தால் என்ன? என்கிற ரீதியில் தயாரிப்பாளர்கள் பணத்தை இவர்களும், தயாரிப்பு நிறுவனங்களில் இவர்களை அறிமுகப்படுத்துபவர்களும் இணைந்து சினிமாவை நாசமாக்கி வருவதாக புலம்புகிறார்கள்.
போலியான சமூக வலைதளங்களை கணக்கு காட்டி தயாரிப்பாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த கும்பலை தமிழ் சினிமாவிலிருந்து தயாரிப்பாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் விரட்டினால் தான் தமிழ் சினிமாவும், தயாரிப்பாளர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்கிறார்கள் சினிமா நலவிரும்பிகள். விரட்டப்படுவார்களா? காத்திருப்போம்.