சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் : ‘ரூட் தல’ மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
கடந்த 23ம் தேதியன்று சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட் தல பிரச்சினையில் தங்களது ‘கெத்’தை காட்டுவதற்காக ரகளையில் ஈடுபட்டனர். கையில் பட்டாக்கத்தியை சுழற்றிய படி ரவுடிகள் போல நடுரோட்டில் சக மாணவர்களை விரட்டி விரட்டி வெட்டினர். இது தொடர்பாக அண்ணாநகர் துணைக்கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா மூலம் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் சுருதி, மதன், ரவிவர்மன் உள்ளிட்ட 4 மாணவர்களை கைது செய்தனர்.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர் மற்றும் திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் சுகுணா சிங் ஆகியோர் தலைமையில் கல்லூரி மாணவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இணைக்கமிஷனர் சுதாகர் இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று முதல்வர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் இனி இது போல கல்லூரி மாணவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில் ஹிஸ்டரி ஷீட் (ரவுடிக்குறிய வரலாற்றுப்பதிவேடு) தொடங்கப்பட்டு அவர் கண்காணிக்கப்படுவர். திருந்தி வாழ்கிறேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்துப் பெற்று அதனை மீறும் பட்சத்தில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். ‘‘ரூட்தல’’ என்ற பேச்சுக்கே இடமில்லை என அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எழும்பூர் இணைக்கமிஷனர் அலுவலகத்தில் இணைக்கமிஷனர் சுதாகர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக்கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னையில் மொத்தம் 17 வழித்தடங்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதாகவும், அதில் 90 பேர் ‘‘ரூட் தல’’ மாணவர்களாக செயல்பட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடுவதாகவும் கல்லூரி முதல்வர்கள் முக்கிய தகவல்களை போலீசாருக்கு அளித்தனர்.
அதன் பேரில் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்களை ஒடுக்குவதில் தனிப்படை போலீசார் களம் இறங்கினர். முதற்கட்டமாக சென்னையில் 54 ரூட் தலைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் இணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரத்தில் போலீசார் கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதே போல் சென்னை அம்பத்தூர் பகுதியில் இருந்து வரக்கூடிய பேருந்து வழித் தடங்களை கண்காணித்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் சுமார் 30 ‘‘ரூட் தல’’ மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110ன் கீழ் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டது. அவர்கள் அம்பத்தூர் துணைக்கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் உறுதிமொழியில் உள்ள வாசகங்களை காவல் அதிகாரி ஒருவர் வாசிக்க அதனை மாணவர்கள் வழிமொழிந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது சட்ட விரோத செயல்களில் ஈடுபடமாட்டோம். அப்படி ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுவோம் என்றும், தங்களது பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதே போல மாதவரம் பகுதியில் இருந்து வரக்கூடிய 17 ரூட் தல மாணவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் உறுதிமொழிப் பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. அண்ணாநகரில் ரூட்தலைகள் 7, புளியந்தோப்பில் 5 மற்றும் வண்ணாரப்பேட்டை ஒரு ரூட் தல மாணவரிடமும் இந்த உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி இந்த உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட மாணவர்கள் ஓராண்டுக்கு எந்தவிதமான அசம்பாவிதம் அல்லது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடக் கூடாது மீறினால் அவர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கைது செய்து சிறையில் அடைக்கும் வகையில் இந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூட்தல மாணவர்களிடமும் உறுதிமொழிப்பத்திரம் பெறப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாக்கத்தியை சுழற்றி மாணவர்களை வெட்டியதாக கைதான 4 மாணவர்கள் மீதும் 307 (கொலை முயற்சி), 294 (பி) (தரக்குறைவாக பேசுதல்), 341, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமும் உறுதி மொழி பத்திரம் பெறப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலையோ, ஆபத்தையோ ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால், ரயில்வே சட்டப்படி கைது நடவடிக்கை தொடரும் என, ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி. அருள் ஜோதி எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து சென்னையில் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்கள். ரயில்கள் மூலம் காலை மற்றும் மாலை கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். சில மாணவர்கள் கத்தியுடன் சக பயணிகளுக்கு அச்சுறுத்தல்களையும், ஆபத்தையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கற்களை கொண்டு வீசி, ரயில்வே பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது தொடர்கிறது.
இது போன்று அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க, ஒரு ரயிலுக்கு 4 ஆர்பிஎஃப் வீரர்கள் வீதம் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153 ன் படி வழக்கு பதிந்து கைது செய்யப்படுவதின் மூலம், 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க ரயில்வே நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கிறார் ஆர்.பி.எஃப், டிஐஜி, அருள் ஜோதி.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வரையிலும், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரையில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களில், ஒரு ரயில் நிலையத்துக்கு 10 கண்காணிப்பு கேமராக்கள் வீதம், சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 136 புறநகர் ரயில் நிலையங்களில் சுழலும் வகையிலான 1360 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக டிஐஜி அருள்ஜோதி, தெரிவித்தார்.
கடந்த மாதம் சேத்துபட்டு ரயில் நிலையத்தில், தேன்மொழி என்ற இளம் பென்ணை வெட்டிவிட்டு ரெயில் முன் பாய்ந்த காதலன் சுரேந்தர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சேத்துபட்டு, பெரம்பூர் உள்ளிட்ட 5 புறநகர் ரயில் நிலையத்தில், இன்னும் 3 வாரத்திற்குள் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என ரயில்வே பாதுகாப்புப்படை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்தார்.
இது தவிர ரயிலில் பயணிக்கும் பயணிகள், ஆர்பிஎஃப் உதவி எண்ணான 182 க்கு தகவல் கொடுத்தால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஐஜி அருள் ஜோதி கேட்டுக்கொண்டுள்ளார்.
- சூரியன்