சினிமாவில் நடிப்பதை விட நிஜத்தில் நன்றாக நடிக்கிறார் விஷால் : செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் யாரும் சங்கத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்திற்கு வருவதில்லையாம். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு வெளிநடப்பு செய்திருக்கிறார் செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்னதான் நடக்கிறது என்று நாம் விசாரித்தபோது கமலக்கண்ணன் நம்மிடம் கூறுகையில்,
“அன்று தயாரிப்பாளர் தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தில் பஜ்ஜி தின்று கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறிய விஷால் இன்று பஜ்ஜி தின்பதற்கு கூட சங்கத்திற்கு வராமல் தனது சகாக்களை அனுப்பி வைக்கிறார். சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் தங்கள் படங்கள் வியாபாரம் ஆகவில்லை என்ற கவலையில் இருக்கிறார்கள். சிறுமுதலீட்டு படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை. கடந்த காலங்களில் ஓரளவு நடைபெற்ற எப்.எம்.எஸ், சேட்டிலைட் வியாபாரமும் தற்போது நடைபெற வில்லை. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத விஷால் தான் தேர்தல் சமயத்தில் உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிட்டார்.
சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான விஷால், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு போன்றோர் லைகா, அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களுடனும், தியேட்டர் உரிமையாளர்களுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டு இவர்கள் மட்டுமே படங்களை தயாரித்தும் வெளியிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
சங்கத்தின் பதவியை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. விஷாலின் நிர்வாகம் தாங்கள் பயன்அடைந்தால் போதும் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் எக்கேடு கேட்டால் என்ன என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதேநிலை நீடித்தால் தயாரிப்பாளர்கள் சங்கமே காணாமல் போகும் நிலை ஏற்படும். விஷால் படங்களில் நடிப்பதை விட நிஜத்தில் நன்றாக நடிக்கிறார். இனிமேலும் இந்த நிர்வாகத்தில் இருக்க விரும்பவில்லை. அதனால்தான் இந்த நிர்வாகத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என்று கூறி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். இதுகுறித்து மற்ற தயாரிப்பாளர்கள் கூறுகையில், கடந்த நிர்வாகம் சரியில்லை என்று விஷாலுக்கு ஒட்டுப்போட்டோம். தற்போது நடைபெறும் விஷால் நிர்வாகம் தேர்தல் சமயத்தில் உறுப்பினர்களிடம் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லையாம். உறுப்பினர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உறுப்பினர்களை பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு சும்மா இருந்தாலே நிம்மதி என்கிறார்கள்.