பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள திருக்கண்ணபுரம்தான் (1920-ல் )பிறந்த ஊர். நாராயணசாமி என்று பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்னாளில் நெடுஞ்செழியன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர். சீனுவாசன் என்ற இவரது தம்பியும் இரா.செழியன் என மாற்றிக்கொண்டார். நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட குடும்பத்தின் பின்னணியே இதற்கு காரணம்..
இரா.செழியன், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி. தந்தை இராஜகோபாலன்,பின்னாளில் நாவலர் என்று அழைக்கப்பட்டவருக்கு, சிறுவயதில் பேசும்போது வார்த்தைகள் சரியாக வராதாம். மீண்டும் மீண்டும் பேசிப் பேசிப் பயிற்சி எடுத்தார். அப்படியும் சில வார்த்தைகள் வராதபோது, ங் என்ற வார்த்தையோடு நிறுத்தி, அதைத் தன்னுடைய பாணியாகவும் மாற்றிக்கொண்டார் சினிமாவில் பாதி வசனத்தை பேசிவிட்டு மீதியை எதிராளிகளே புரிந்துகொண்டு சிரிக்கட்டும் என்று கேப் விடும் பாணியை முதன் முதலில் மேடையில் கொண்டுவந்தவர் இவர் . விறுவிறுப்பாய் பேசிக்கொண்டே போவார்.. பட்டென நிறுத்தி அமைதியாகி அவருக்கு உச்சரிப்பில் ஒத்துழைப்பு தராத ‘ங’ மேல் புள்ளியை வைத்து ங்ஞ்ஞ் என ஒரு ஸ்டைலாக இழுப்பார்.. அதிலேயே அவர் யாரை என்ன சொல்லவருகிறார் என்பது மேடைக்கு எதிரே உள்ளவர்களுக்கு புரிந்துபோய், சில விநாடிகளில் கைத்தட்டல் விண்ணை பிளக்கும்..
நாவலர். 1938, முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தான் அவருடய முதல் போராட்டம்.
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அவர் படித்தபோது, வகுப்பு தவிர்த்த நேரங்களில் கல்லூரியில் தமிழிலக்கணத்தில் வல்லவரான அவர், இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் என எந்த சப்ஜெக்ட்டில் கேள்வியைக் கேட்டாலும் அருவிபோல் கொட்டி பிரசங்கமே செய்வார். பாட புத்தகங்களையும் தாண்டி எண்ணற்ற நூல்களை படிக்க ஆரம்பித்ததன் விளைவு அது..
நாத்திகரான நாவலர், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் போன்றவற்றை திட்டமிட்டே கரைத்துக் குடித்திருந்தார். காரணம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவற்றிலிருந்து மேற்கொள்காட்டி ஆத்திக்கத்தின் ஆதிக்கப்போக்கை வெளுக்கத்தான் என்பதைத்தவிர வேறு காரணம் என்ன இருக்கப்போகிறது. இத்தகைய தீவிரமான நாத்திகப்போக்கு தந்தை பெரியாரிடம் நாவலரை நெருக்கமாக கொண்டு சென்றதில் ஆச்சர்யமே இல்லை..
இளம் தாடியும் நெடுநெடு உயரமும் அவர் அடையாள மானது. ‘இளம்தாடி’ நெடுஞ்செழியன் என்றழைக்கப் பட்டார். திருமண நிகழ்ச்சி களைக் கொள்கை விளக்கக் கூட்டங்களாக மாற்றியது திராவிடர் இயக்கத்தின் சாதனை. நாவலர் தன் திருமணத்தை விழாவாக நடத்தாமல், திருமணம் முடிந்த பிறகுதான் வெளியுலகத்துக்கு அறிவித்தார். “ஏன் உன் கல்யாணத்துக்கு என்னை அழைக்கவில்லை?” என்று கேட்ட நண்பரிடம், “எனக்குத்தானே கல்யாணம். உனக்கு அங்கே என்ன வேலை?” என்று கேட்கும் அளவுக்குப் பெரியாரியம் அவரைப் பற்றியிருந்தது.
திராவிடர் கழகத்தில் இருந்தபோதே தனக்கான தம்பிகள் வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அண்ணா. பெரியாரை விட்டுப் பிரிந்து தி.மு.க-வைத் தொடங்கியபோது, தாங்கிப்பிடித்த தூண்களாக இருந்தவர்கள் அந்தத் தம்பிகளே. அப்படியான தம்பிகளில் ஒருவர்தான் இவர். தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். ‘தம்பி, தலைமையேற்க வா, உன் தலைமையின்கீழ் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று அண்ணாவால், மாநாட்டுத் தலைமையேற்க அழைக்கப்பட்டார்.
1961-ல் ஈ.வி.கே.சம்பத் தி.மு.க-வை விட்டு வெளியேறியபோது தி.மு.க-வின் அவைத்தலைவரானார் நாவலர். 1967-ல் ஆட்சியைப் பிடித்தபோது அண்ணாவுக்கு அடுத்த இடம். கல்வி அமைச்சரானார். அண்ணா மறைந்தபோது தற்காலிக முதல்வர் ஆனார்.
எம்எல்ஏக்களால் நிரம்புவற்கு முன் எம்ஏ (வி.கி,) பட்டதாரி தலைவர்களால் நிறைந்து கிடந்த வித்தியாசமான கட்சி திமுக. அப்படிப்பட்ட எம்ஏக்கள் தலைவர்களின் தலைவனான அறிஞர் அண்ணாவாலேயே, நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்டவர் நாவலர் நெடுஞ்செழியன். பெரியாரை விட்டு அண்ணா பிரிந்துவந்து 1949ல் திமுகவை ஆரம்பித்தபோது, நாவலரும் வெளியே வந்து திமுகவின் துணைப்பொதுச்செயலாளரானார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்று பொதுச்செயலாளராகவும் ஆனார்.
கடந்த 1962ல் பொதுத்தேர்தல் முடிந்து சட்டமன்றத்தில் திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. காஞ்சிபுரத்தில் தோல்வியுற்ற அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக போய்விட்டதால் அடுத்த இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்..
சிந்திக்க மறுப்பவன், அஞ்சுபவன் தனக்குத் தானே துரோகியாகி மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று சொன்ன டாக்டர் நாவலர் பிறந்த நாள் ஜூலை 11.
நாவலரின் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள். ஆனால் ‘தொடக்கக்கால திராவிட இயக்கத்தின் லட்சியவாத முகம்’ என்பதுதான் அவருக்குப் பெருமை சேர்க்கும் அடையாளம். தி.மு.க-வினர் நூற்றுக்கணக்கான இதழ்களை நடத்தினர். அவற்றில் ஒன்று நாவலரின் ‘மன்றம்’ இதழ். அண்ணாவின் ‘திராவிட நாடு’க்கும் ‘முரசொலி’க்கும் கண்ணதாசனின் ‘தென்றல்’ இதழுக்கும் உடன்பிறப்புகள் மத்தியில் என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ, அதே எதிர்பார்ப்பு நாவலரின் ‘மன்றம்’ இதழுக்கும் இருந்தது.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா சொன்னபோதும் தொடக்கக்கால தி.மு.க நாத்திக இயக்கமாகவே இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜி கணேசனுக்கு எதிராகத் சுவரொட்டிகள் ஒட்டியதும், வெறுத்துப்போன சிவாஜி காங்கிரஸுக்குப் போனதும் வரலாறு. ஆனால், போகப்போக தொண்டர்கள் நாத்திகத்தைக் கைவிட்டனர். அது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களுக்கும் பரவியது. அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குப் போனார். ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க-வைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால் நாவலர் இறுதிவரை நாத்திகராகவே வாழ்ந்து மறைந்தார். இத்தனைக்கும் அவர் மனைவி விசாலாட்சி, பங்காரு அடிகளார் பக்தையாக இருந்தார். அ.தி.மு.க-வில் எஞ்சிய நாத்திகர்களில் ஒருவர் நாவலர்.
நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு குறித்த நூல்களும் திருக்குறள் உரை நூலும் மீண்டும் பதிப்பிக்கப் வேண்டும். அவரின் ‘மன்றம்’ இதழ்கள் நூலாகக் கொண்டுவரப்பட வேண்டும். அது திராவிட இயக்க வரலாற்றையும் தமிழக அரசியல் வரலாற்றையும் புரிந்துகொள்ள உதவும்.
& கே.எஸ்.ராதாகிருஷ்ணன்