தமிழகம்

பாலச்சந்தர் 90 : மரங்கள் நடும் சபதம் 2020

இந்திய திரை உலகையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். இவர் 1930 அண்டு திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் கிராமத்தில் ஜூலை ஒன்பதாம் தேதி பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டு இருந்தார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டிகேஎஸ் சகோதரர்கள், எம்.ஆர்.ராதா ஆகியோர் நாடகங்களைப் பார்த்து நாடகத்துறையில் அலாதியான ஆர்வம் கொண்டு தனது ஊரில் நடைபெறும் விழாக்களிலும், கல்லூரி காலங்களிலும், தனது நண்பர்களை வைத்து நாடகங்களை நடத்தினார். அதன்பிறகு சென்னை வந்து மேஜர் சந்திரகாந்தா நாடகத்தின் மூலம் அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார். இவரது இயக்கத்தையும், திறமையையும் பார்த்து வியந்த எம்ஜிஆர் அவரை அழைத்து பாராட்டி தான் நடிக்கும் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதவைத்து பாலச்சந்தரின் திரைப் பயணத்தை துவக்கி வைத்தார்.

அதன்பிறகு நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தில் கதை சொல்வதிலும், கதாபாத்திரங்களை கையாள்வதிலும் புதுப்புது யுத்திகைளை கையாண்டு புரட்சி செய்தார். அதன்பிறகு மூன்று முடிச்சு, நிழல் நிஜமானது, புன்னகை மன்னன், புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தி முத்திரை பதித்தார்.

கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் இயக்குனர் சிகரத்திற்கு நிகர் அவர்தான். கதாநாயகன், கதாநாயகி மட்டும் அதன் தன்மையை உணர்ந்து நடிப்பதில் மட்டும் பாலச்சந்தர் திருப்தி அடைந்ததில்லை. பிரேமுக்குள் தெரியும் ஒவ்வொரு விஷயமும் கதை சொல்ல வேண்டும். அது ஒவ்வொரு ரசிகனின் மனதைத் தொட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் கே.பாலசந்தர். தமிழகத்தின் இளைஞர்களுக்கு பல்வேறு பாடங்களை தன் படங்களின் மூலம் கற்றுக் கொடுத்தவர் கே.பாலச்சந்தர். இவரது அலுவலகத்தில் எழுதியிருக்கும் வாசகங்கள் “தவறிழைத்துவிட்டு தெரிவிக்கும் வருத்தங்களை ஏற்பதில் எனக்கு உடன்பாடில்லை” என்ற வாசகத்தின் மூலம் பாலச்சந்தரின் குணத்தை சொல்கிறது அந்த வரிகள். “உனது எஞ்சிய வாழ்க்கையின் முதல் நாள் இது.” எத்தனை தோல்விகளை இழைத்தவராக இருந்தாலும் தனது அடுத்த இலக்கை நோக்கி உந்தித்தள்ளும் இந்த வரிகள். ஒவ்வொரு நாளும் புத்துணர்வோடு செயல்பட்டவர் கே.பாலச்சந்தர்.

இவரது 90 வது பிறந்தநாள் சமீபத்தில் 90 மரங்கள் நடும் சபதம் 2020 என்கிற தலைப்பில் கே.பாலச்சந்தர் பாசறையில் வளர்ந்தவர்களால் சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி ஆகிய இருவரும் இரண்டு மரக்கன்றுகளையும் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையையும் கே.பாலச்சந்தர் ரசிகர் மன்றத்தின் செயலாளர் கவிதாலயா வீ.பாபுவிடம் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தரால் அறிமுகமானவரும் ரசிகர் மன்றத்தின் தலைவருமான நடிகர் ராஜேஷ், பூவிலங்கு மோகன், நடிகை சச்சு, நடிகர் ரகுமான் போன்ற பிரபலங்கள் மரக்கன்றுகளை வழங்கினார்கள். திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி முன்னிலையில் கே.பாலச்சந்தர் ரசிகர் மன்ற செயலாளர் கவிதாலயா வீ.பாபு மேற்பார்வையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுகுறித்து வீ.பாபு கூறுகையில் ரசிகர் மன்றத்தின் தலைவர் கலைமாமணி நடிகர் ராஜேஷ் உத்தரவின்படி கே.பி. 90 மரங்கள் நடும் சபதம் 2020 என்கிற தலைப்பில் எனது மேற்பார்வையில் இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தில் அதன் தலைவர் தளபதி தலைமையில் 300 உதவி இயக்குனர்களுக்கு இனிப்பும், மதிய உணவாக பிரியாணியும் வழங்கி கே.பாலச்சந்தரின் 90 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்ட இயக்குனரின் பாசறையில் வளர்ந்தவர்கள் அவரது நினைவாக பல்வேறு நலத்திட்டங்களை செய்வது சிறப்பான செயல் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் செயலாளர் வீ.பாபுவை பாராட்டினர்.

  • சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button