தமிழகம்

11வது உலகத் தமிழ் மாநாடு : தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” – சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே இருந்த பண்புமிக்க அடையாளம்.

தமிழின் அரிய தொன்மையை முதலில் அறிந்து உலகிற்குச் சொன்னவர்கள் வழக்கம் போல அயல்நாட்டினர் தான். கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழியாகத் தமிழைக் கண்டார். வீரமாமுனிவர் தமிழின் பழமையை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய அரசு அமைத்த தொல்லியல் துறை தமிழ்நாட்டில் ஆய்வுகளை நடத்தியபோது பண்டைக் கற்காலக் கருவிகள் கிடைத்து வியக்க வைத்தன.

மொழியியல் ஆய்வில் திராவிட மொழிகளின் தனிப்பண்பை எல்லீஸ் என்கிற ஆங்கிலேய ஆய்வாளர் கண்டுணர்ந்த பிறகு தமிழ் குறித்த விரிவான ஆய்வுக்கான தேவையை உணர்ந்தனர் பல நாடுகளில் உள்ள தமிழறிஞர்களும், வரலாற்று ஆய்வாளர்களும்.

நேரு பிரதமராக இருந்த நேரத்தில், தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார், ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்றோர் டெல்லியில் நடந்த வட்டார மொழிகள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, தொன்மையான தமிழ் மொழியை சர்வதேச அளவில் எடுத்துச் சென்று, பல்வேறு நாட்டில் உள்ள தமிழர்கள் ஆய்வு நடத்தும் வகையில் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஏற்கனவே, ஓமந்தூரார் (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில், பெரியசாமி தூரன் அவர்களை பதிப்பாசியரகாக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்க் களஞ்சியம் (எட்டு தொகுதிகள்) திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதேபோல், அறிவியல் கலைக் களஞ்சியமும் பல தொகுப்புகளாக அப்போது வெளியிடப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வடக்குப் பக்கத்தில் உள்ள கிளாக் டவர் பிரிவில் இயங்கியதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் இந்தித்திணிப்புக்கு எதிராக மாநில மொழியுணர்வுடன் தமிழை உயர்த்திப்பிடித்த மொழிப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடினார்கள்.

தமிழை ஆட்சிமொழியாக்குவது பற்றிய கருத்தாக்கங்கள் அப்போதே கோரிக்கையாக வைக்கப்பட்டன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழின் பெருமை உணரப்பட்டது. தமிழ் உணர்வுள்ளவர்கள் ஒன்று சேர்வதன் அவசியத்தை அந்தச்சூழல் வலியுறுத்தியது.

இந்த நிலையில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவரான தனிநாயகம் அடிகள், தமிழகத்தில் இருந்த தெ.பொ.மீ, மு.வரதராசனார், வ.அய்.சுப்பிரமணியம், சாலை இளந்திரையன் போன்றவர்களின் கூட்டு முயற்சியில் 1964 ஆம் ஆண்டில் தில்லியில் கூடிய கலந்தாய்வுக் கூட்டத்தின் விளைவாகவே உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்கிற அரசியல் சாராத பன்னாட்டு அமைப்பு உருவானது. பன்னாட்டு அறிஞர்களும் அதில் இடம் பெற்றிருந்தார்கள். தொடர்ந்து பல நாடுகளில் அதன் கிளைகள் உருவாயின.

தமிழ் மொழி மற்றும் தமிழர் மரபு குறித்த ஆய்வை முன்னெடுக்கும் விதமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும், இலங்கை, மலேசியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழறிஞர்களின் முன் முயற்சியோடு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் பல நாடுகளிலிருந்தும் பங்கேற்றார்கள். அதில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டவர் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம். மாநாட்டுக்கு உதவிய அவர் இரண்டாவதாக நடக்க இருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தமிழகத்தில் சென்னையில் நடத்துவது குறித்த அனுமதியோடு தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.

கடந்த 1967 ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 1968 ஆம் ஆண்டு பக்தவச்சலத்தின் விருப்பப்படி சென்னையில் இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா. இதில், அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது சென்னை மெரினாக் கடற்கரையில் தமிழறிஞர்களின் சிலைகள் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டன. திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்த பாஷ்யம் மற்றும் வேனு கோபால் சர்மா வீடுகளுக்கு அண்ணாவும், பக்தவச்சலமும் சென்று அந்த ஓவியத்தை அங்கீகரித்திருப்பது அப்போது கட்சி சார்பை மீறிய உறவுக்குச் சான்று.

சென்னையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஐநூறுக்கு மேற்பட்ட ஆய்வறிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மரபு சார்ந்த அடையாளத்துடன் நிறையக் கலை நிகழ்ச்சிகள் சென்னையில் பொது மக்களின் பங்கேற்போடு நடந்தன. முதல்வரான அண்ணா மாநாட்டில் ஆற்றிய எழுச்சி மிக்க உரையின் தலைப்பு “தயங்காதே தமிழா!”

1970 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 180 தமிழறிஞர்கள் வரை கலந்து கொண்டார்கள்.
1974 ஆம் ஆண்டு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உலக அளவில் பல்வேறு தமிழறிஞர்கள் மற்றும் பொது மக்களின் அமோக ஆதரவுடன் நடந்த மாநாட்டின் இறுதியில் நடந்த கலவரமும், சில தமிழர்கள் உயிரிழந்த சம்பவங்களும் கரும்புள்ளியாக மாறின.

ஏழாண்டு கால இடைவெளிக்குப் பிறகு 1981 ல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி நாட்டை நடத்தினார் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சிறப்பு விருந்தினராக அதில் பங்கேற்றவர் பிரதமர் இந்திராகாந்தி. 750க்கும் மேற்ப்பட்ட தமிழறிஞர்கள் இதில் கலந்துகொண்டனர். தமிழ்ப் பல்கலைக் கழகமும், உலகத் தமிழ்ச்சங்கமும் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். இம்மாநாட்டில் “காவிரி தந்த கலைச்செல்வி” என்கிற நாட்டிய நாடகத்தை நடத்திப் பங்கேற்றவர் பின்னாளில் தமிழக முதல்வரான ஜெயலலிதா.

1987 ஆம் ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரில் நடந்த ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை அளித்தனர்.

1989 ல் மொரீசியஸ் நாட்டில் நடந்த ஏழாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 250 தமிழறிஞர்கள் வரை கலந்து கொண்டனர். மொரீசியஸ் மக்களும் அதில் திரளாகக் கலந்து கொண்டனர்.

1995 ல் தமிழகத்தில் தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதல்வரான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் நடந்தது. இம்மாநாட்டிலும் ஒரு கரும்புள்ளியாக இலங்கையிலிருந்து மாநாட்டில் பங்கேற்க வந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட 32 தமிழறிஞர்களை விமான நிலையத்திலிருந்தே திருப்பி அனுப்பப் பட்ட நிகழ்வு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

2015 ல் மலேசியாத் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. இரண்டாயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாடு மலேசிய அரசின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடந்தேறியது. மாநாட்டுத் தலைமை ஏற்று நடத்தியவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு. “உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்” என்பது தான் மாநாட்டின் மையாக இருந்தது.

2019 ல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நான்கு நாட்கள் நடந்த கருத்தரங்குகளில் பல நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையில் 2010 ஜூன் மாதம் கோவையில் குறுகிய கால இடைவெளியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இசைவு தெரிவிக்காத நிலையில், அன்றைய முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் கருத்தரங்கு மற்றும் ஆய்வரங்குகளை நடத்தினார்.

கால் நூற்றாண்டுக்குப் பின் தற்போது தமிழகத்தில் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவது குறித்த ஏற்பாட்டை முன்னெடுத்திருக்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இம்மாநாட்டை நடத்துவது குறித்து முதற்கட்டமாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.

உலகமயமாக்கல் குறித்த விவாதங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இப்போது 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறார்கள் தமிழர்கள். முன்பை விட, தமிழகத்தில் நடந்திருக்கிற தொல்லியல் ஆய்வுகள் தமிழர் மரபின் மேன்மையை வரலாற்று வெளியில் உணர்த்தியிருக்கின்றன. ஆதிச்சநல்லூர், கீழடி, கொற்கை, கொடுமணல், சிவகளை என்று பல இடங்களில் நடந்திருக்கிற தொல்லியில் ஆய்வுகள் தமிழின் தொன்மையை உலக அரங்கிலும் உணர வைத்திருக்கின்றன.

இதுவரை நடந்த மாநாடுகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சரியாக தொகுக்கப்படவில்லை என்பது வேதனையான விடயம்.
இதுவரை நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களை இணைத்துத் தமிழியல் வாழ்வின் தொன்மையையும், மேன்மையையும் பேணி வந்திருக்கின்றது. உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களை ஒன்று திரட்டித் தமிழ் மொழி தொடர்பாக இது வரை நடந்துள்ள ஆய்வுகளை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ளப் பெரும்பங்காற்றியது உலகத் தமிழ் மாநாடுகள். தமிழாய்வுகள் உலகத் தரத்தை எட்ட இம்மாநாடுகள் வழிகோலின.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய காலந்தொட்டு 2021 வரை 57 ஆண்டுகளில் திட்டப்படி 28 மாநாடுகள் நடந்திருக்க வேண்டியதற்குப் பதிலாக பல்வேறு காரணங்களால் 10 மாநாடுகள் மட்டுமே இதுவரை நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் சங்க இலக்கியம் துவங்கி நவீனகாலத்து பின்நவீனத்துவம் வரையிலான அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய விரிவான, பரந்துபட்ட ஆய்வரங்கை நடக்கவிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முன்னெடுத்து நடத்தும். அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழறிஞர்களையும் வரவேற்றுப் பங்கேற்கும் வகையில் இம்மாநாடு நடைபெறும். நவீனத் தொழில்நுட்பத்தின் தேவைக்கேற்ப தமிழ் மொழியை வளப்படுத்தும் சூழலையும் அது உருவாக்கும். தமிழ்ப்பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் பொது மக்களின் பங்கேற்போடு நிகழும்.

சிறப்பு மிக்க 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை பிரான்சிலும், தென் ஆப்பிரிக்க நாட்டிலும் நடத்தலாம் என்கிற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், அண்மையில் நடந்த இரண்டு கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட தமிழறிஞர்கள் பலரின் கருத்து – மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்பது தான். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது நமக்குத் தனிச்சிறப்பு. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற உறுப்பினர்களும் இதே கருத்தையே உணர்த்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 1968 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய போது, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா சொன்னதைப் போல ‘தயங்காமல் முடிவெடுப்போம்’.

பல்லாண்டு கடந்த தொன்மத் தமிழ் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கட்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
ஒருங்கிணைப்பாளர்,
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button