11, 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் தொகுப்புத் திட்டம் ரத்து : மு.க.ஸ்டாலின் வரவேற்பு
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு நடைமுறையில் இருந்த 4 பாடத்திட்ட முறையை மாற்றி மூன்று பாடத்திட்ட முறையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
முன்னதாக 600 மதிப்பெண்களுக்கு இருந்த பாடத்திட்டம் முறை 500 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டது. அதன்படி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல் வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் இரண்டு மொழிப் பாடங்களை படித்தால் போதுமானது. மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கணிதம் தவிர்த்து உயிர் அறிவியல் (பயலாஜி) வேதியியல் இயற்பியல் ஆகிய பாடங்களுடன் மொழிப் பாடங்களை மற்றும் பயின்றால் போதுமானது. இந்த பாத்திட்ட முறைப்படி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அரசின் இந்த முடிவு மாணவர்களின் கல்வி சுதந்திரத்தையும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிறகு செல்லும் வாய்ப்பை பாதிக்கும் என்கிற விமர்சனம் எழுந்தது. இந்தநிலையில், தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், மூன்று பாட திட்ட முறை மாற்றப்பட்டு வரும் கல்வியாண்டில் 4 பாடத்திட்ட முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இயற்பியல், வேதியியல், கணிதம், உயிர் அறிவியல் மற்றும் மொழிப்பாடங்கள் என 600மதிப்பெண்களுக்கான பழைய முறையே தொடரும்.
இதுகுறித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘குளறுபடியானது – ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி!’ என்று குறிப்பிட்டுள்ளார்.