பல்லடம் அருகே ஜோதிடத்தால் ஊராட்சி தலைவருக்கு நேர்ந்த விபரீதம் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பருவாய் கிராமம். இங்கு அதிமுக வை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஊராட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் மாமனார் வீட்டில் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் கவிதா என்பவர் ரத்தக்காயத்துடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சரஸ்வதி(62), கணவர் பொன்னுச்சானி(66), மணி (66) ஆகிய மூவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கவிதா கொடுத்த புகாரின் பேரில் பருவாய் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூவர் மீதும், சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கவிதா மற்றும் அவரது கணவர் அருண்குமார் மீதும் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கவிதா வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னனியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவிச்சந்திரனின் மாமனார் வீட்டில் பசு மாடு சில தினங்களுக்கு முன்னர் திடீரென இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவிதா தரப்பில் கரடிவாவியில் உள்ள ஜோதிட நிலையத்திற்குச் சென்று ஜோசியம் பார்த்துள்ளனர். இதில் குடும்பத்தில் கெட்ட நேரம் நடப்பதாகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி ஜோதிடர் கூறியுள்ளார். இதனையடுத்து தனது பசு மாட்டிற்கு ரவிச்சந்திரன் விஷம் வைத்து கொன்றுவிட்டதாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் ஜோதிடரிடம் சென்று கேட்டதற்கு தான் அப்படி சொல்லவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் கவிதாவின் வீட்டில் இருந்து சத்தம் வரவே ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் அங்கு சென்று பார்த்தபோது முன்புற கேட் பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காயமடைந்த சரஸ்வதியை மருத்துவ சிகிச்சைக்காக பல்லடத்திற்கு ரவிச்சந்திரன் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பந்தமே இல்லாமல் ஜோசியத்தை காரணம் காட்டி தகராறில் ஈடுபட்ட கவிதா ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மீது தன்னை தாக்கியதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் அளித்திருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் இறந்ததாக கூறப்படும் பசுமாடு குறித்து கால்நடைத்துறைக்கு தகவல் அளிக்காமல் கறிக்காக வெட்டக்குடுத்ததாக கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சொந்த விருப்பு வெறுப்பை மனதில் கொண்டு போலீசாரிடம் தவறான தகவல்களை கொடுப்பதும், ஜோசியத்தை நம்பி மற்றவரை சந்தேகப்படுபவர்களுக்கு பருவாய் சம்பவம் ஒரு உதாரணம். எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.




