தமிழ் சினிமாவின் தனித்துவ அடையாளம் “பராசக்தி” – விமர்சனம்

பராசக்தி என்றால் பரபரப்பு தான், வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் பராசக்தி திரைப்படம் ஏற்படுத்திய பரபரப்புகள் கொஞ்சநஞ்சமல்ல, அதனால்தான் தமிழ் சினிமாவின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக விஞ்சி நிற்கிறது.
கதைப்படி… இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஒன்றினைந்து புறநானூற்று படை என்கிற பெயரில் தீவிரமாக போராடுகின்றனர். அந்த அமைப்புக்கு செழியன் ( சிவகார்த்திகேயன் ) தலைமை தாங்கி வழிநடத்துகிறார். இவர்களை ஒடுக்குவதற்காக டெல்லியிலிருந்து சிறப்பு அதிகாரி ரவி மோகன் வருகிறார். ரயில் எரிப்பு சம்பவத்தில் அதிகாரியிடனான மோதலில் நண்பனை இழக்க நேரிட போராட்டங்களை கைவிட்டுவிட்டு குடும்பத்தை கவணித்து வருகிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு செழியனின் தம்பி சின்னதுரை ( அதர்வா ) கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக போராடுகிறார். இதற்கிடையில் ரயில்வே பணிக்காக எதிர்வீட்டில் வசித்து வரும் பெண்ணிடம் ( ஶ்ரீ லீலா ) இந்தி கற்க விரும்புகிறார் செழியன். கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைகிறது. மத்திய அரசு வானளாவிய அதிகாரத்தை அளித்து ஒடுக்க நினைக்கிறது.
அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக 1959 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களின் ரயில் எரிப்பு போராட்டம், உயிர் தியாகம், மக்களின் வாழ்வியல், பொள்ளாச்சி கலவரத்தில் பிணக்குவியல் என தத்ரூபமாக இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்திய இயக்குநர் சுதா கொங்கராவுக்கு பாராட்டுக்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் செழியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். 1952 ல் வெளிவந்த பராசக்தி மூலம் நடிகர் திலகம் என்கிற உச்சத்திற்கு சென்ற சிவாஜி கணேசன் போல், இந்த பராசக்தி மூலம் நடிப்பு சக்கரவர்த்தி என்கிற நிலைக்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

வானளாவிய அதிகாரத்துடன் கொடூரமான அதிகாரியாக நடித்திருக்கும் ரவி மோகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் அதர்வா, ஶ்ரீ லீலா உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தனது அற்புதமான இசையால் நகர்த்தியிருக்கிறார் ஜீவி பிரகாஷ். ஒளிப்பதிவும் சிறப்பு.
இன்றைய ஒன்றிய அரசின் செயல்பாடுகளும், படத்தின் கதையும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை படம் பார்க்கும்போது உணரலாம். கடந்த செப்டம்பர் மாதம் நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ஊரின் பெயர் பலகைகளில் மும்மொழி கொள்கையை திணித்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இருமொழி கொள்கையைப் பின்பற்றி வரும் தமிழகத்தில், ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக எப்போது “தீ” பரவுமோ ?




