ஏலம் விடாத கடைகளில் பார் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள் ! எம்.பி பெயரில் அதிகாரம் செலுத்தும் பார் உரிமையாளர் !

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள வஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறை எத்தனை தடை விதித்தாலும் மது விற்பனையை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்டு பார் நடத்துவதற்கான தேதி முடிவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டு ஏலம் விடப்படாமல் ஆளும் கட்சியை சேர்ந்த நபரே தன்னிச்சையாக மது விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு கடை வீதம் ஏலம் விடப்பட்டு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு நபரே மடத்துக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் கடைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ? மதுவிலக்கு போலீசார் வேண்டுமானால் பங்குதாரர்கள் என்பதால் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைத்திருக்கலாம், ஆனால் சம்பந்தப்பட்ட கடைகளின் விற்பனை மேலாளர்கள் துணையோடு, ஏலம் விடாத ஏழு கடைகளில் பார் நடைபெறுவது திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகிக்கு தெரியாமல் இருக்குமா ?
இதுசம்பந்தமாக காவல்துறை தரப்பு எத்தனை முறை நடவடிக்கை எடுத்தாலும், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் திருட்டுக் கும்பல் அதனை பொருட்படுத்தாமல் மது விற்பனை செய்து வருகின்றனர். பார் செயல்படும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் பெட்ரோல் பங்க், அரசு பள்ளி மாணவர்கள் விடுதி செயல்படுகிறது. மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால் அப்பகுதியினர் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
கணியூர் காவல்நிலையம் இதன் அருகில் செயல்பட்டு வரும் நிலையில், சட்ட விரோத மது விற்பனைக்கு போலீஸாரும் உடந்தையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகியின் அதிகார துஷ்பிரயோகத்தால் பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரிக்கும் முன்னரே காவல்துறையினர், இப்பகுதியில் செயல்படும் பார் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் எத்தனை முறை ஆதாரங்களுடன் செய்திகள் வந்தாலும், பார் உரிமையாளர், எம்.பி பெயரைச் சொல்லி போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறதாம். திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருப்பதால், நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க நேரிடும் எனவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.



