சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவம்… பின்னணி விவரம்…
சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வெகுநேரம் கடை திறந்திருந்ததாக கேள்வி எழுப்பிய போலீசாரிடம் ஜெயராஜீம் அவரது மகன் பென்னிக்சும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி ஜெயராஜை விசாரணைக்கு சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அழைத்து சென்றிருக்கிறார்கள்.
தனது தந்தையை காவலர்கள் அடித்து உதைப்பதாக மகன் பென்னிக்சுக்கு தகவல் கிடைத்ததும் காவல்நிலையத்திற்கு சென்று அவரைத் தாக்கிய காவலர்களிடம் கெஞ்சி கதறி அழுதிருக்கிறார். ஆனால் மிருக பலத்துடன் தாக்கிய காவலர்கள் ஜெயராஜை தாக்குவதை நிறுத்தவில்லை. தன் கண்முன்னே தந்தையின் ஆடைகளை களைந்து தாக்குவதை எந்த மகனால் பார்த்துக் கொண்டு இருக்க முடியும். கோபம் தாங்காத பென்னிக்ஸ் காவலர்களை அடிக்காமல் தடுத்ததுதான் தாமதம், உடனே பென்னிக்ஸையும் ஆடைகளைக் களைந்து மனிதத்தை மறந்து இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு முதல் நிலைக்காவலர்கள், ஐந்து காவலர்கள் , நான்கு ஊர்க்காவல் படையினர் மொத்தம் பதிமூன்று பேர் சேர்ந்து இருவரையும் தாக்கி இருவரின் ஆசனவாயில் பிரம்பை உள்ளே நுழைத்து கொடுமைப்படுத்தியதோடு, பென்னிக்சின் மார்பு முடிகளை பிடுங்கி சித்ரவதை செய்திருக்கிறார்கள்.
அதன்பிறகு சாத்தான்குளம் அரசு மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிறையில் அடைப்பதற்கு உடல் தகுதியுடன் இருப்பதாகக் கூறி மருத்துவச் சான்றிதழ் வாங்கி சாத்தான்குளம் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்திருக்கிறார்கள். அங்கு இருவரும் உடல்நிலை மோசமாகி ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வியாபாரிகளும், ஊர் மக்களும் ஒன்று திரண்டு காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்கு அழைத்துச் சென்று தந்தை மகன் இருவரை கொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் இருவரின் உடல்களை பெற்றுக் கொள்வோம் என்று ஏராளமான பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து காவல்துறை சார்பில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு உறுதியளித்துள்ளதாகவும், அரசின் மீது நம்பிக்கை வைத்து உடலைப் பெற்றுக் கொள்வதாகவும் ஜெயராஜின் மகள் கூறினார்.
இந்த இரட்டைக்கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. விசாரணைக்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்பவர்களின் உயிர் பறிக்கப்படுவது இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி இருவரின் உடலையும் கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அந்த நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் வியாபாரிகளிடமும், உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினார். அதன்பிறகு இந்த இருவரின் மரணத்திற்கு காரணமான சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களிடம் விசாரணை நடத்துகையில் காவல் துறையினர் நீதிபதி கேட்கும் ஆவணங்களை கொடுக்காமல் நீதிபதியின் விசாரணைக்கும் ஒத்துழைக்க வில்லை.
இந்நிலையில் தந்தை மகன் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடையை அடைக்காமல் விசாரணைக்கு வர மறுத்து தர்ணாவில் ஈடுபட்டதாகவும், தரையில் உருண்டு புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவர்கள் இருவர் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் விசாரணைக்கு செல்லும்போது அவர்களின் அருகில் உள்ள கடையில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில் கடந்த 19ம் தேதி இரவு 9.45 மணியளவில் ஜெயராஜ் கடைக்கு வெளியே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருப்பது போலவும் பிறகு சாலையின் மறுபுறம் நிற்கும் காவல் வாகனத்தை நோக்கி அவர் செல்வது போன்ற காட்சிகளும் உள்ளன. ஜெயராஜ் காவல் வாகனத்தை நோக்கி சென்ற பிறகு அவரது கடையில் இருந்த பலர் வெளியே வந்து வேடிக்கை பார்க்கும் காட்சிகள் உள்ளன. அப்போது பென்னிக்ஸ் கடைக்குள் இருந்து வெளியேறி வேகமாக காவல் வாகனத்தை நோக்கிச் செல்கிறார்.
காவல் வாகனம் சென்ற பிறகு கடைக்கு திரும்பும் பென்னிக்ஸ் கடையை அடைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 19 ஆம் தேதி இரவு 9.30 மணியில் இருந்து பென்னிக்ஸ் கடையை அடைக்கும் வரை அங்கு எவ்வித தகராறோ, வாக்குவாதமோ ஏற்பட்டது போன்ற காட்சிகள் இல்லை.
இதேபோல் விசாரணைக்கு வராமல் இருவரும் தர்ணாவில் ஈடுபட்டது போன்ற சம்பவங்களும் அங்கு நடைபெற்றதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவில்லை. மேலும் காவல்நிலையத்திற்கு செல்லும்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இயல்பான நிலையிலேயே இருந்ததாக சிசிடிவி மூலம் தெரியவருகிறது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் அருகாமையில் இருந்த கடைகள் எதுவும் அடைக்கப்படவில்லை. அந்த கடைகள் திறந்தே இருந்தன. அவற்றை அடைக்கும்படி போலீசார் கூறுவது போன்ற காட்சிகளும் இல்லை. இந்நிலையில் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர், ஒரு காவலர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்பு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் உண்மைத் தன்மை கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் இருவர் உயிரிழந்தது சம்பந்தமாக சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆய்வாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அங்கு பணிபுரிந்த அனைவரும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள், இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர், இவர்களை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இருவரையும் சிறையில் அடைக்க அனுமதித்த சிறைத்துறை அதிகாரி போன்ற அனைவரிடமும் முறையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே மனித உரிமை அமைப்புகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் போன்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
–ராபர்ட் ராஜ்