சீமான் மீதான புகார்.. விஜயலட்சுமி வாபஸ் பெற்றது ஏன்..?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதற்கிடையில் விஜயலட்சுமி அளித்த புகார் சம்பந்தமாக சீமான் பேசுகையில், ஒரே நேரத்தில் தன்னையும், விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோரையும் விசாரணை செய்ய வேண்டும். விஜயலட்சுமி அளித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எனவே மூவரையும் ஒன்றாக விசாரணை செய்வதன் மூலமே உண்மை தெரியவரும் என கூறியிருந்தார்.
சீமான் விவகாரம் தொடர்பாக தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவரான வீரலட்சுமி கூறுகையில், நாங்கள் அவதூறு பரப்புகிறோம் என்று நீங்கள் நினைத்தால் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள். கிரிமினல் வழக்கு தொடருங்கள். அந்த வழக்கை எப்படி சந்திக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சீமானைப் போல் நான்கு ஆட்களை அனுப்பி மிரட்டும் வேலையெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சட்டத்தை நம்புகிறோம். மதிக்கிறோம்.
ஆகவே நீங்கள் சட்டரீதியாகவே அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள். விஜயலட்சுமி உங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். நீங்கள் பாலியல் குற்றவாளி. உங்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜர் ஆகுங்கள். நீங்கள் தவறு செய்துள்ளீர்கள். பத்துப் பேரை அனுப்பி மிரட்டுகிறார்கள். பன்றிகள் தான் கூட்டமாக வரும். நான் சிங்கம். அதனால் தான் தனியாக வந்துள்ளேன் என்றார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமி சென்னையிலிருந்து தூரத்தில் தான் போலீசார் என்னை வைத்திருந்தனர். வீரலட்சுமிக்கு தெரிந்த இடம் என்பதால் அங்கு வைத்திருந்தனர். சில தினங்களாக வீரலட்சுமி ஒரு வழியில் செல்கிறார். என்னை ஒரு வழியில் எடுத்துச் சென்றார். ஆகையால், இந்த வழக்கை திரும்பப் பெற்று விட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் நான் வழக்கை திரும்பப் பெறவில்லை.
சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன். வழக்கை தொடர்வதும், சென்னைக்கு வருவதும் இனி இல்லை. காவல்துறையின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. இருபது சம்மன் அனுப்பினாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டார் சீமான். இரண்டு வாரமாக வீட்டுக் காவலில் இருந்தது போல் இருந்தேன். என்னிடம் செல்போன் கூட இல்லை. சீமானுக்கு தமிழ்நாட்டில் முழுபவர் உள்ளது. அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
முன்னதாக சீமான் மீது கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை விஜயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– சூரியன்