எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதில் முறைகேடு…
சினிமாத்தொழிலாளர்களுக்கு பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய பொருட்களை தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு பிரித்துக் கொடுத்து வருகிறது. இந்தப் பொருட்களை அந்தந்த சங்கங்களின் நிர்வாகிகள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இதில் பெரும்பாலான சங்கங்களில் அதன் உறுப்பினர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்கள். மறைந்த மாமனிதர் எம்ஜிஆரின் படங்களில் பணிபுரிந்த ஆரூர்தாஸ் போன்ற மூத்த எழுத்தாளர்களுக்கு அரிசி கொடுத்ததை எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் டி.கே.சண்முகசுந்தரம், சி.ரெங்கநாதன் ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு தம்பட்டம் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வயதான மூத்த கலைஞர்களுக்கு வீடு தேடிச் சென்று பொருட்களை வழங்கியது பாராட்டுக்குரிய செயல் என்றாலும் அந்தப் பொருட்களை எடுத்துச் சென்றவர்களின் தவறான நடவடிக்கைகளால் மற்ற நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் மூலம் பல்வேறு புகார்கள் வந்ததால் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் சண்முகசுந்தரத்தையும், ரெங்கநாதனையும் சங்கத்திற்கு வரவேண்டாம். இவர்களுக்குப் பதிலாக மனோஜ்குமார், பேரரசு, யார் கண்ணன், யுரேகா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குருவை அமைத்து சண்முகசுந்தரம், ரெங்கநாதன் ஆகிய இருவர் மீதான புகார்களை விசாரிக்கவும், நிவாரணப் பொருட்களை வழங்கவும் சொல்லியிருக்கிறார்.
இந்த தகவல் அனைத்து உறுப்பினர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் இனிமேல் பொருட்களை பெறுவதற்கு இந்த நான்கு நபர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று தகவலும் சங்கத்தில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள்.
அதன்பிறகு சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைபேசி மூலம் இந்த நான்கு பேர் கொண்ட குழு விசாரித்ததில் ரெங்கநாதனும், சண்முகசுந்தரமும் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவருக்கும் விளக்கமளிக்குமாறு தகவல் அனுப்பி இருக்கிறார்கள். இந்த இருவரும் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் நிவாரணப் பொருட்களை கொடுத்ததாக போலி ரெக்கார்டு தயார் செய்தது விசாரணையில் தெரிய வந்ததால் தான் சங்கத்தின் நிர்வாகிகள் இவர்களை சங்கத்திற்கு நுழைய விடாமல் விளக்கம் கேட்டு தகவல் அனுப்பி இருப்பதாக உறுப்பினர்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த தகவல் எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவராக இருக்கும் செல்வமணியிடம் சொல்லப்பட்டதாம். அதற்கு அவர் முறைகேடு புகாருக்கு உள்ளான சண்முக சுந்தரம், ரெங்கநாதன் இருவருக்கும் ஆதரவை தெரிவித்து கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறியதோடு பொருளாளர் ரமேஷ்கண்ணாவையும் கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டாராம்.
இப்போது எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பெப்சியில் வைத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சங்கத்தின் பொருளாளர் ரமேஷ் கண்ணா பொருட்களை வாங்க வந்திருக்கிறார். அப்போது அங்கு போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் செல்வமணி ஆதரவாளர்கள். இதற்கு ரமேஷ் கண்ணா எனக்கு முதலில் தாருங்கள் என்று பொருட்களை பெற்றுக்கொள்ளவே பெப்சிக்கு வந்தார். ஆனால் அவர் வழங்கியது போல் போட்டோ போட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
ஆக மொத்தத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் சங்கங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பொருட்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகையில் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்கள் சங்கத்தில் இலவசமாக வந்த பொருட்களை உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுப்பதில் முறைகேடு செய்தவர்களுக்கு பெப்சி தலைவர் செல்வமணி தலையீட்டால் கண்ணியமிக்க சங்கமாக இருந்த எழுத்தாளர்கள் சங்கம் இன்று தலைவர் பாக்கியராஜ் தலைமையில் ஒரு அணியாகவும் புகாருக்கு உள்ளானவர்கள் துணைத்தலைவர் செல்வமணி தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுவது சங்கத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று சங்கத்தின் உறுப்பினர்கள் புலம்பி வருகின்றனர்.
எது எப்படியோ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று கிராமங்களில் கூறுவதை கேட்டிருக்கிறோம். அதேபோல் சினிமா சங்கங்களில் நிர்வாகிகள் இரண்டு பிரிவுகளாக நீயா? நானா? என்ற ஈகோவால் உறுப்பினர்கள் படும்பாடுதான் கொரோனா சமயத்தில் பெரும் திண்டாட்டமாக இருக்கிறது.
- சூரியன்