தமிழகம்

செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு: மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்குமா?

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகியப் படிப்புகளைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் (பி.எஸ்சி நர்சிங்) படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மருத்துவப் படிப்புகளைத் தொடர்ந்து செவிலியர் படிப்பையும் நீட் தேர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களிடமிருந்து பறிக்க முயல்வது வேதனைக்குரியது.
தமிழ்நாட்டில் செவிலியர் பட்டப்படிப்புக்கு தொடக்கம் முதலே 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் தான் அடிப்படைத் தகுதியாக இருந்து வருகிறது. நடப்பாண்டும் இந்த அடிப்படையில் தான் செவிலியர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் படிப்பும் நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் தமிழக அரசின் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
செவிலியர் பட்டப் படிப்புக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு துடிப்பது ஏன்? என்று தெரியவில்லை. மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தையே மத்திய அரசால் நியாயப்படுத்த முடியவில்லை. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் எந்த வகையிலும் மேம்படவில்லை.
நீட் தேர்வில் 13 விழுக்காடு மதிப்பெண் எடுத்தவர்கள் கூட மருத்துவக் கல்வியில் சேர தகுதி பெறுகின்றனர். நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவக் கல்வி வணிகமாவதையும் நீட் தேர்வு தடுக்கவில்லை. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தகுதிகளைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டு, ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை பணம் செலுத்தும் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் மருத்துவப் படிப்புக்கான இடம் வழங்கப்படுகிறது. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே தோற்று விட்ட நிலையில் அதை மற்ற படிப்புகளுக்கு நீட்டிப்பது நியாயமல்ல.
மருத்துவப் படிப்பு படிக்கும் அளவுக்கு தகுதியும், திறமையும் இருந்தாலும், அதற்கான வசதியில்லாத கிராமப்புற மாணவச் செல்வங்களின் இலக்கு செவிலியர் படிப்பு தான். செவிலியர் படிப்பை முடித்தால் அரசு மருத்துவமனைகளிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ கவுரவமான ஊதியத்தில் பணியில் சேரலாம் என்ற நம்பிக்கை தான் ஏராளமான கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு செவிலியர் பட்டப்படிப்பு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்வது கிராமப்புற மாணவர்களின் செவிலியர் கல்வி கனவை கருக்கி விடும்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. அவ்வழக்கு மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறிய பிறகும், அதே உச்சநீதிமன்றத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வருவதற்குள்ளாகவே இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக செவிலியர் படிப்புக்கும் நீட்டை அறிமுகம் செய்யத் துடிக்கிறது. இனி வரும் காலங்களில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் நிச்சயம் வரும்.
அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு துடிப்பதன் நோக்கம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அல்ல. மாறாக, பயிற்சி வணிகத்தை விரிவுபடுத்துவது தான். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்பதற்காக தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 6&ஆம் வகுப்பு முதல் 12&ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் சுமார் 10 லட்சம் பேர் அவர்களது பள்ளிகளின் மூலமாகவே முன்னணி பயிற்சி நிறுவனங்களிடம் பயிற்சி பெறுகின்றனர். இந்த வகையில் மட்டும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கணக்கிட்டால் இது லட்சம் கோடியைத் தாண்டி விடும்.
மருத்துவம் தவிர மற்றப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்தால் இதை மேலும் பல மடங்காக பெருக்க முடியும். இந்த வருவாய் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் காலடி வைத்துள்ளன. இவற்றுக்கு தீனி போடுவதற்காகத் தான் நீட் விரிவாக்கத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இது தவறு மட்டுமல்ல… பாவமும் கூட. தனியார் நிறுவனங்களின் வணிக லாபத்திற்காக ஊரக, ஏழை மாணவர்களின் செவிலியர் கல்வி கனவுகளை சிதைத்து விடக்கூடாது. எனவே, செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து முறியடிக்குமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button