டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் நடத்திய போராட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிப்பாளையம் பிரதான கொச்சின் சாலையில் அமைந்துள்ளது 1830 டாஸ்மாக் மதுக்கடை. இக்கடை அமைந்துள்ள பகுதி குடியிருப்புக்கள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் மேற்படி கடைக்கு பார் வசதி இல்லாததால் சாலையிலேயே மது வாங்கும் குடிமகன்கள் குடித்துவிட்டு நிலை தடுமாறி போதையில் விழுந்துகிடப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மேலும் இக்கடை பிரதான சாலையில் அமைந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் நடமாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மதுக்கடையை அகற்றகோரி கருப்புகொடி ஆர்பாட்டம் பொதுமக்கள் சார்பாக நடத்திய நிலையில் பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பாக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை வரவேற்றார். தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகி என்.வி.ராமசாமி மற்றும் பிஜேபி, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனிடையே போராட்டத்தின் போது டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக வந்த குடிமகன்களை கண்டு ஆவேசமடைந்த பெண்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்களை சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர்