தமிழகம்

ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா..?

1963ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் ‘சென்னை மாகாணம்’ என்பதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யக் கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டுவந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.என். லிங்கம், “தமிழ்நாடு எனப் பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது பேசிய அண்ணா, “நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று கேட்டார் அதற்கு காங்கிரஸ் உறுப்பினரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அத்தகைய பேச்சாற்றல் மிக்கவராக அண்ணா திகழ்ந்தார்.

இந்தி எதிர்ப்பு நிலைபாடு, திராவிட நாடு கோரிக்கை போன்றவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்நிலையில், அவர், சென்னை வந்தபோது திமுகவினர் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக திமுக தலைவர்களை ‘நான்சென்ஸ்’ என்று கூறி கடுமையாக விமர்சித்தார். பின்னர், மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு வியந்து போனார்.

நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டிய போது, குறுக்கிட்ட நேரு “அவரை தொந்தரவு செய்யாதீர்கள், பேசவிடுங்கள்” என்று கூறி அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்டு, மனம் மயங்கினார் நேரு. அண்ணா வலுவான வாதங்களை வைத்துப் பேசுவதில் அலாதி திறமை மிக்கராக இருந்ததுடன், மாற்று கருத்து கொண்டவர்களையும் மனம் மயங்க வைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தோல்வியுற்ற தகவல் வந்தபோது, எதிர்முகாமில் இருந்த அண்ணா, “காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என்று மிகுந்த அரசியல் நாகரிகத்தோடு கூறினார். மேலும், “வெற்றியைக் கொண்டாடுகிறேன் என்று கூறி தோல்வியுற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது.

எனவே, கொஞ்சநாள் கொண்டாட்டங்களைத் தள்ளிப்போடுங்கள் என்று கண்ணியத்தோடு கூறியவர் அண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை.

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமிளத்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் இது தொடர்பாக மாநில அரசு அமைத்திருந்த உயர்மட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆளுநர் விரிவாக ஆராய்ந்தார். இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது.

எனவே, இந்த மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திரும்பி அனுப்பியுள்ளார். மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கான காரணங்களைக் கடந்த பிப். 1ஆம் தேதி விளக்கப்பட்டுள்ளது. . நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய வேண்டுமென்றும் ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளில் “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?“ என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் என்றுள்ளார்.

இதனிடையே நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை 2-வது திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை. 5 மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வகையில் நியாயம் என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button