விவசாயி மீது தாக்குதல் நடத்திய அரசு அதிகாரி, வேடிக்கை பார்த்த போலீசார் – திருப்பூரில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது தெற்கு அவிநாசிபாளையம். இப்பகுதியில் அமைந்துள்ள செங்காட்டுத்தோட்டம் தேவித்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி கன்னிமுத்து (35). தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். மேலும் தனது நிலத்தில் விளையும் விவசாய பொருட்களை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிகாலை 2 மணிக்கு உழவர் சந்தைக்கு வரும் கன்னிமுத்து, அங்கு கொடுக்கப்படும் டோக்கன் மூலமாக எடை தராசை பெற்று நேரடியாக காய்களை விற்றுவந்துள்ளார். சுமார் 150 கடைகள் உள்ள உழவர் சந்தையில் அதிக அளவில் வியாபாரிகள் அதிகாரிககின் உதவியோடு ஊடுருவி வியாபாரதில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவசாயி கன்னிமுத்து அங்குள்ள உழவர் சந்தை அதிகாரி மணிவேலிடம் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே சந்தைக்கு வந்த அரசு அதிகாரி மணிவேல், யார் புகார் கொடுத்தது எனக்கேட்டுள்ளார். அதற்கு கன்னிமுத்து தான் தான் என கூறியவுடன், அதிகாரி மணிவேல் ஒருமையில் கன்னிமுத்துவை மிரட்டியதோடு காது கொடுத்து கேட்க முடியாத தகாத வார்த்தையில் விவசாயி கன்னிமுத்துவை திட்டியதோடு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி முன்னிலையில் தாக்குதல் நடத்தியதோடு தர தரவென இழுத்து சென்று உழவர் சந்தையை விட்டு வெளியேற்றியுள்ளார். மேலும் யாரிடம் வேண்டுமானால் கூறிக்கொள், வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மணிவேல் கன்னிமுத்துவை மிரட்டியுள்ளார். போலீசார் முன்னிலையில் விவசாயி மீது நடைபெற்ற தாக்குதலின் போது போலீசார் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஹிட்லர் போன்று சர்வாதிகாரியாக அரசு அதிகாரி மணிவேல் விவசாயி மீது தாக்குதல் ந்டத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முதுகெழும்பாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதே உழவர் சந்தை, ஆனால் வியாபாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு ரவுடி போன்று செயல்பட்டு விவசாயி மீது தாக்குதல் நடத்தியதோடு, தகாத வார்த்தையால் பேசிய அதிகாரி மணிவேல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு வேடிக்கை பார்த்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.